அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனையில் கூடுதல் பணியாளர்கள் நியமித்தல், பழைய தனியார் ஒப்பந்தம் நிறுவனம் கொடுத்த ஊதியம் வழங்குதல், மாதத்திற்கு இரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனியார் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மே இறுதியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் 132 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஒவ்வொரு குறைதீர் முகாமிலும் வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி மனு அளித்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பிலும் உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் கூடுதல் பணியாளர்கள் நியமித்தல், பழைய தனியார் ஒப்பந்தம் நிறுவனம் கொடுத்த ஊதியம் வழங்குதல், மாதத்திற்கு இரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனியார் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு செய்து மருத்துவமனை கேட் முன்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணைக் கண்காணிப்பாளர் அன்புவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 14 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் ஊழியர்கள் பணிக்கு சென்றனர். இதில் இந்திய கம்யூ., மாநில குழு உறுப்பினர் பாலமுருகன், ம.நீ.ம., மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., நிர்வாகி நேரு, தமிழக வெற்றி கழக நிர்வாகி கண்ணன் உள்பட வி.சி.க., உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஆதரவாக தர்ணாவில் பங்கேற்றனர்.