சிவப்பு சோளம் விலை இல்லை; விவசாயிகள் வருத்தம்
விருதுநகர்: விருதுநகர் ஒன்றிய பகுதிகளில் இந்தாண்டு அதிகம் விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் சிவப்பு சோளம் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் மானாவாரி பயிர்களாக மக்காசோளம், எள், சூரியகாந்தி உள்ளிட்ட பயிர் வகைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. இதில் சிவப்பு சோளம் விருதுநகர் ஒன்றிய பகுதிகளான சின்னப்பரெட்டியபட்டி, எல்லிங்கநாயக்கன்பட்டி, குந்தலப்பட்டி, நாராயணபுரம், சின்னமூப்பன்பட்டி, பாப்பாக்குடி, வடமலைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. கடந்தாண்டு குவிண்டால் ரூ.3800க்கு விற்பனையானது. இந்தாண்டு ரூ.3200க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு விலை அதிகம் இருந்த காரணத்தால் இந்தாண்டு ஏராளமான விவசாயிகள் விளைச்சல் செய்தனர். இந்நிலையில் கடந்தாண்டு விலை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரூ.600 குறைந்து விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்தாண்டு மழையும் அதிக பெய்துள்ளதால் விளைச்சல் அதிகமாகவே வந்துள்ளது. இதனால் ஏக்கருக்கு 7 குவிண்டால் விளைச்சல் காண வேண்டிய இடத்தில் 9 குவிண்டால் வரை விளைச்சல் காணப்பட்டுள்ளது.இதே போல் டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது ஆங்காங்கே அறுவடைக்கு தயாரான சிவப்பு சோளம் பாதிக்கப்பட்டது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்பில்லை. இவற்றை காய வைத்து, அனுப்புவதற்கு கூலிக்கு பணியாட்கள் அதிகம் தேவைப்படுவதால் விளைச்சல் இருந்தும், விலை குறைவாக உள்ளதால் லாபமில்லாத சூழல் உள்ளது. இதனால் சிவப்பு சோள விவசாயிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.