| ADDED : ஜன 05, 2024 05:45 AM
விருதுநகர் : விருதுநகரில் ஓராண்டில் மட்டும் 53 குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மைவிழிச்செல்வியின் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் 2023ம் ஆண்டில் தொழிலாளர், நுகர்வோர் நலன் குறித்த சட்டங்களின் கீழ் பல்வேறு ஆய்வுகளை செய்தனர். இதில் குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் 53 குழந்தை, வளரிளம்பருவ தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடை நிறுவனங்களில் பதிவேடுகள் பராமரிக்காமல் இருத்தல், பாதுகாப்பு, தமிழ் பெயர் பலகை வைக்காததன் காரணமாக 480 கடைகள் மீதும், இதே காரணங்களுக்காக ஓட்டல்களில் 261 கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பண்டிகை விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்காத 356 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமுறை எடையளவைகள் சட்டத்தின் படி 548 பேர் மீதும், பொட்டல பொருட்கள் விதிகளின் படி 112 பேரும், குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 110 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து 337 தொழிலாளர்களுக்கு ரூ.85 லட்சத்து 21 ஆயிரத்து 393 ஊதிய நிலுவை தொகை பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் 50 சட்டங்கள் போடப்பட்டுள்ளன என தொழிலாளர் உதவி ஆணையர் அமலாக்கம் மைவிழிச்செல்வி தெரிவித்தார்.