தெருக்களில் ரோடு சேதம், துார்வாராத வாறுகால்
சிவகாசி: தெருக்களில் ரோடு சேதம், துார்வாராத வாறுகால் என சிவகாசி அருகே சுக்கிரவார் பட்டி ஊராட்சி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.அதிவீரன்பட்டியை உள்ளடக்கிய சுக்கிரவார்பட்டி ஊராட்சியில் சுக்கிரவார்பட்டி ஊருக்கு முன்பாக திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயிலிருந்து ஆனைக்குட்டம் அணைக்குச் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே 25 மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பகுதி விவசாயிகள் விவசாய பொருட்களை பாலத்தின் வழியாகத்தான் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில் குறுகலான இந்த பாலத்தின் இருபுறமும் தடுப்புச் சுவர் இல்லை. இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால் இரவில் பணி முடிந்து திரும்பி வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.மழைக்காலங்களில் ஓடையின் வழியாக அதிக அளவில் தண்ணீர் செல்லும். அது போன்ற காலங்களில் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இங்குள்ள ரேஷன் கடை சேதம் அடைந்த நிலையில் தற்காலிகமாக மகளிர் சுய உதவி குழு கட்டடத்தில் இட நெருக்கடியில் செயல்படுகின்றது.அரசு பள்ளி அருகே குப்பை கொட்டப்பட்டு எரிப்பதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் வழி திறந்த வெளி கழிப்பறையாக மாறியுள்ளதால் மாணவர்கள் தொற்று நோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். விவசாய நிலங்களில் சேதம் அடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். மெயின் ரோட்டில் வாறுகால் சேதமடைந்திருப்பதால் கழிவு நீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.அழகுராஜா, இங்குள்ள மயானத்திற்கு செல்லும் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. தெரு விளக்குகளும் இல்லாததால் ஏதேனும் இரவில் மிகவும் சிரமமாக உள்ளது. ரோட்டை சீரமைத்து தெருவிளக்குகள் அமைப்பதோடு குளியல் தொட்டியும் ஏற்பாடு செய்ய வேண்டும்.ராமமூர்த்தி, பெரும்பான்மையான தெருக்களில் வாறுகால் துார்வாரப்படவில்லை. தவிர ஒரு சில தெருக்களில் வாறுகால் சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி விடுகின்றது. தெருக்களில் ரோடு சேதம் அடைந்திருப்பதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பிரகாஷ், இங்குள்ள கண்மாய் முழுவதுமே சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வந்தும் தேக்க முடியவில்லை. கண்மாயை துார்வாரி சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஊருக்குள் ரோட்டோரத்தில் திறந்த நிலையில் உள்ள கிணற்றிற்கு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.மகாலிங்கம், திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு மண்டபம் இல்லை. தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு வசதி இல்லை. எனவே ஊராட்சியில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும்.