ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கலர் கோலப்பொடி விற்பனை களைகட்டி வருகிறது. ஆண்டாள் கோயிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வாங்கி செல்வதால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது மார்கழி மாதத்தை முன்னிட்டு நகரின் அனைத்து வீட்டு வாசல்களில் அதிகாலையில் கலர் கோலப்பொடிகள் கொண்டு கோலங்கள் போடப்பட்டு வருகிறது. அதே நேரம் மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் கோயிலுக்கு மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், கோயில் மாட வீதிகள் மற்றும் தெருக்களில் போடப்பட்டுள்ள கலர் கோலங்களைக் கண்டு வியந்து, தங்களுக்கும் தேவையான கலர் கோலப்பொடிகளை அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.கடந்த கார்த்திகை மாதம் முதல் சூடு பிடிக்க துவங்கிய கலர் கோலப்பொடி விற்பனை தற்போது மிகவும் உச்சம் தொட்டு வருகிறது. நகரில் 20க்கும் மேற்பட்ட கலர் கோலப்பொடி தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் உள்ளன. இங்கு பச்சை, மஞ்சள், ரோஸ், சிவப்பு, நீலம், அரக்கு உட்பட பல்வேறு கலர்களில் தயாரிக்கப்படுகிறது. இதனை 100 கிராம் பாக்கெட் முதல் ஒரு கிலோ, ஒரு படி என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பஜார் வீதியிலும், தெருக்களிலும் ஏராளமான பெண்கள் கலர் கோலப்பொடி விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் விற்பனை இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கலர் கோலப்பொடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பெரிய கண்ணன் கூறுகையில், பல வருடங்களாக இத்தொழில் ஈடுபட்டு வருகிறோம். கார்த்திகை மாதம் முதல் தை மாதம் முதல் வாரம் வரை கோலப்பொடி விற்பனை வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பது வழக்கம். மற்ற ஊர்களில் இல்லாத வகையில் இங்கு தரமான கலர் கோலப்பொடிகள் உற்பத்தி செய்யப்படுவதால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும் அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில், போன்ற வெளிமாவட்ட வியாபாரிகளும் வாங்கிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். 200 கிராம் பாக்கெட் ரூபாய் 5 என்று விற்கப்படுகிறது மேலும், அரை கிலோ, ஒரு கிலோ, ஒரு படி என்ற அளவிலும் கலர் கோலப்பொடிகளும், வெள்ளை நிற கோலப்பொடியும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் கலர் கோலப்பொடி விற்பனை நடப்பது மகிழ்ச்சியை தருகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.