உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு நவ. 21க்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

 பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு நவ. 21க்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் சிகாமணி உட்பட 5 பேர் மீதான போக்சோ வழக்கின் தீர்ப்பினை ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றம் நவம்பர் 21க்கு ஒத்தி வைத்தது. 2022--23ல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு படிப்பிற்கு உதவி செய்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக, பரமக்குடி அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சிகாமணி 44, அவரது நிறுவன ஊழியர்கள் அன்னலட்சுமி 34, கயல்விழி 45, புதுமலர் பிரபாகரன் 42, ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகமது 36, ஆகியோரை பரமக்குடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின் இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் போக்சோ நீதிமன்றத்தில் சிகாமணி ஜாமின் பெற்றார். அதனை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி., மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தநிலையில், அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இதனை எதிர்த்து சிகாமணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு சரிதான் என்றும், வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றி, 5 மாதத்தில் முடிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்தாண்டு இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. சாட்சி விசாரணை, இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்க நீதிமன்றம் பட்டியலிட்டு இருந்தது. நேற்று வழக்கு விசாரணை வந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியினர். தீர்ப்பை எதிர்பார்த்து சி.பி.சி.ஐ.டி., போலீசாரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். ஆனால், வழக்கின் ஆவணங்கள் சரி பார்த்தல், குறியிடுதல் போன்ற காரணங்களுக்காக தீர்ப்பை நவ.21க்கு நீதிபதி புஷ்பராணி ஒத்தி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்