புதர் மண்டி கிடக்கும் நீர்வரத்து ஓடைகள், நீர் பிடிப்பு பகுதிகள் கழிவுகளின் பிடியில் ஸ்ரீவில்லிபுத்துார் வடமலைக்குறிச்சி கண்மாய்
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடமலைக்குறிச்சி கண்மாயில் கழிவுகள் கொட்டப்பட்டும், ஆகாய தாமரைகள், கருவேல மரங்கள் வளர்ந்தும், நீர்வரத்து ஓடையில் செடி கொடிகள் வளர்ந்தும், நீர் பிடிப்பு பகுதிகள் மண்மேவியும் காணப்படுவதால் தண்ணீரை தேக்க முடியாமல் பாசன விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த கண்மாயின் மூலம் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் நெல், வாழை பருத்தி மற்றும் பல்வேறு பூச்செடிகள் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தனர்.மேற்கு தொடர்ச்சி செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் மழை பெய்தால் மொட்டப்பெத்தான் கண்மாய் நிரம்பி பெருமாள்பட்டி வழியாகவும், ரெங்கர் கோயிலில் இருந்து கூட்டுறவு மில் வழியாகவும் மழை நீர் வரும் வகையில் நீர்வரத்து ஓடைகள் உள்ளது.இதில் மொட்டபெத்தான் கண்மாயில் இருந்து குலாலர் தெரு, பெருமாள்பட்டி வழியாக வரும் நீர்வரத்து ஓடையில் செடி கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் கழிவுகள் கொட்டப்பட்டும் பாதைகள் அடைபட்டு காணப்படுகிறது.கூட்டுறவு மில் பாதை வழியாக உள்ள நீர்வரத்து ஓடை, 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுவதால் மழை பெய்தால் தண்ணீர் வரும் சூழல் உள்ளது.கண்மாயின் நீர் பிடிப்பு பகுதியில் செடி கொடிகள் வளர்ந்தும், கழிவுகள் கொட்டப்பட்டும் ஆக்கிரமிக்கப்பட்டும் மண்மேவியும் காணப்படுகிறது. மதகுகள், அதன் ஷட்டர்கள் பழுதடைந்து காணப்படுகிறது. மதகுப்பகுதியில் விஷச் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது .ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவியாக செந்தில்குமாரி இருந்தபோது வடமலைக்குறிச்சி கண்மாயிலிருந்து மாரியம்மன் கோவில் தெரு, ஊரணிப்பட்டி கீழப்பட்டி தெரு வழியாக செங்குளம் வரையுள்ள நீர்வரத்து பாதை தூர்வாரப்பட்டது. அதன் பின்னர் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் பாலத்தின் கண்கள் அடைப்பட்டு கிடக்கிறது.பல ஆண்டுகளாக கண்மாய் நிரம்பாததால் விவசாயம் செய்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதனால் 30 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைச் சோலையாக காணப்பட்ட விவசாய நிலங்கள் எல்லாம் இன்று முட்செடிகள் வளர்ந்து பயனற்ற நிலைக்கு ஆளாகி வருகிறது.எனவே, கண்மாயை முழு அளவில் தூர்வாரியும், நீர்வரத்து பாதைகளை சுத்தம் செய்தும், கரைகளை பலப்படுத்தியும் கலிங்குகள், மடைகளை சீரமைத்து முறையாக பராமரிக்க பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வடமலைகுறிச்சி கண்மாய் பாசன விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும். விஷச் செடிகளை அகற்ற வேண்டும்
செல்வகுமார், விவசாயி: கண்மாயில் தண்ணீர் திறந்து விடப்படும் மதகுகள் பகுதியில் விஷ செடிகள் வளர்ந்து, கழிவுகள் கொட்டப்பட்டு அடைப்பட்டு கிடக்கிறது. ஷட்டர்கள் சரி செய்ய வேண்டும். கண்மாய் ஆக்கிரமிக்கப்படுவதையும் கழிவுகள் கொட்டுப்படுவதையும் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நீர்வரத்து பாதைகளை சீரமைப்பது அவசியம்
கோவிந்தராஜ், விவசாயி: வடமலைகுறிச்சி கண்மாய்க்கு மழை நீர் வரக்கூடிய நீர்வரத்து ஓடையில் செடி, கொடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் கழிவுகள் கொட்டப்பட்டும் காணப்படுகிறது. மொட்ட பெத்தான் கண்மாயிலிருந்து குலாலர் தெரு, பெருமாள்பட்டி வழியாக செல்லும் நீர்வரத்து ஓடையை சீரமைக்க வேண்டும். இதுபோல் வடமலைகுறிச்சி கண்மாயிலிருந்து செங்குளம் கண்மாய் வரையுள்ள நீர்வரத்து ஓடையை முழு அளவில் சீரமைக்க வேண்டும்.