| ADDED : ஜன 05, 2024 05:16 AM
ஸ்ரீவில்லிபுத்தூர : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூர்சாகிபுரம் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தி, நிரந்தர தீர்வு ஏற்படுத்த கோரி மாணவர்கள் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் நின்று போராட்டம் நடத்தினர்.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட அழகு தேவேந்திரபுரம், நூர்சாகிபுரம், இனாம் கரிசல்குளம், துலுக்கன் குளம், கண்ணார்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வன்னியம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி பள்ளிகளில் படித்து வருகின்றனர்.மாணவர்கள் வரும் பாதையில் உள்ள ரயில்வே சுரங்க பாதையில் அடிக்கடி தண்ணீர் தேங்கி கடந்து செல்ல முடியாமல், 7 கிலோ மீட்டர் தூரம் பெருமாள்தேவன் பெட்டி வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.தேங்கிய தண்ணீரை ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தினாலும், தற்போது பெய்த மழையினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து சுரங்கப்பாதையில் தண்ணீர் ஊற்றெடுத்து வருகிறது. இதனால் சுமார் மூன்று அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்குவதால் டூவீலர்கள், சைக்கிள்களில் மாணவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த வாரம் போராட்டம் நடத்தியும் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.இந்நிலையில் நேற்று காலை 8:30 மணிக்கு பள்ளி மாணவர்கள் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் நின்று போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை மாற்றுப் பாதையை சீரமைத்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.