| ADDED : ஜன 24, 2024 04:58 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் சேதமடைந்த பழைய கட்டடங்கள் அதிகளவில் இடிக்கப்பட்டன. இதற்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் ஆமைவேகத்தில் நடப்பதாலும் பல இடங்களில் இன்னும் பணிகள் துவங்காததாலும் மாணவர்கள் கடும் சிரமத்தை சந்திக்கும் சூழல் உள்ளது. 2022ல் திருநெல்வேலி மாவட்ட பள்ளி ஒன்றில் சேதமடைந்த கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பலியாகினர். இதையடுத்து தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்து இடியும் நிலையில் உள்ள பழமையான கட்டடங்களை இடிக்க அறிவுறுத்தியது. அதன் படி விருதுநகர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு ஊரக வளர்ச்சி முகமை, பொதுப்பணித்துறையினரால் இடிக்கப்பட்டன. இதில் ஒரு சில கட்டடங்கள் மட்டுமே மாணவர்களால் வகுப்பறையாக பயன்படுத்தப்படாமல் இருந்தது. பல கட்டடங்கள் வகுப்பறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இடியும் நிலை கட்டடங்கள் என்ற கணக்கில் இடிக்கப்பட்டதால், தற்போது போதிய இடவசதியின்றி பள்ளிகளில் இடநெருக்கடி உடன் மாணவர்கள் கல்வி பயல்கின்றனர்.புதிய வகுப்பறை கட்டுவதற்கான பணிகள் பல பள்ளிகளில் துவங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்களும் பாடம் எடுப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக துவக்க, நடுநிலை பள்ளிகளில் இந்த பிரச்னை அதிகளவில் உள்ளது. மேலும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வது குறைவதால், இந்த இட நெருக்கடி பிரச்னை வரும் காலகட்டங்களில் பெரிதாக பேசப்படாது என பள்ளி கல்வித்துறை நிர்வாகம் அசட்டை செய்வதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதை கட்டும் ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறையும் மாணவர்களின் எண்ணிக்கையை பார்த்து பணிகளை துவக்காமலே உள்ளனர்.மாணவர்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் இடியும் நிலை கட்டடங்கள் இடிக்கப்பட்டு விட்ட போதிலும், புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படாதது என்பது ஒரு வகையில் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதியை சீர்குலைக்கும் நடவடிக்கையாக தான் ஆசிரியர்கள் பார்க்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இடிக்கப்பட்ட கட்டடங்களில் எத்தனை மீண்டும் கட்டப்பட்டுள்ளது என ஆய்வு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் மாணவர்களுக்கு இட நெருக்கடி உள்ள இடங்களில் விரைவில் கட்டடங்களை கட்டி வகுப்பறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.