விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி
அருப்புக்கோட்டை: குடிசை தொழில் போல் வீட்டில் தொழில் நடத்தி வரும் விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி விதிப்பை கொண்டு வருவது வாழ்வாரத்தை பாதிக்கும், என அருப்புக்கோட்டை விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். அருப்புக்கோட்டை விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கணேசன் துணைத்தலைவர் ராஜ்குமார் செயலாளர் சரவணன் கூறியதாவது: அருப்புக்கோட்டையில் 7 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி உள்ளவர்கள் அவர்கள் குடியிருக்கும் வீடுகளிலேயே நிறுவி தொழில் நடத்தி வருகின்றனர். அவர்கள் சமையல் செய்வது, சாப்பிடுவது, உறங்குவது எல்லாமே சிறிய அளவிலான இடத்தில் தான் நடந்து வருகிறது.இதில் இலவச மின்சாரம் பெற்றவர்களுக்கு வணிகவரி, கட்டட வரி விதிப்பு செய்வது நெசவாளர்களின் தொழிலை பாதிக்கும். ஏற்கனவே 2022 ல், உயர்த்தப்பட்ட வரி உயர்வு வணிக தொழில் கட்டடங்களுக்கு 100 சதவிகிதம், வீட்டு வரி 600 ரூபாய் உள்ள வீடுகளுக்கு 25 சதவிகிதம் வரி உயர்வு, 600 - - 1200 க்குள் 50 சதவீத வரி உயர்வு, 1200 க்கு மேல் 75 சதவீத வரி உயர்த்தப்பட்டுள்ளது.அதன் பின், ஆண்டுதோறும் 6 சதவிகித வரி உயர்வு தானாக உயர்த்தப்பட்டு வருகிறது. இவை எல்லாம் மக்களுக்கு மிகப்பெரிய வரிச் சுமையாக இருக்கிறது. இந்நிலையில் சிறு குடிசை தொழில் போல் வீட்டில் தொழில் நடத்தி வரும் விசைத்தறியாளர்கள் வீடுகளுக்கும் தொழில் கூடத்திற்கான வரி விதிப்பை கொண்டு வருவது அவர்களின் வாழ்வாரத்தை பாதிக்கும். இதனால் அரசு வீட்டு வரி விகிதத்தை தொழிற்சாலை வரியாக மாற்றாமல் தொழிலை பாதுகாக்க வேண்டும், என்றனர். இது குறித்து மனுவை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் வழங்கினர்.