மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
15 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
15 hour(s) ago
சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு, நிலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டும் பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குட்டி ஜப்பான் சிவகாசியில் பட்டாசு. தீப்பெட்டி, அச்சுத்தொழில் பிரதானமாக உள்ளது. இதனால் நகர் முழுவதும் எந்நேரமும் பரபரப்பாக போக்குவரத்து நிறைந்திருக்கும். சிவகாசி சாட்சியாபுரம், செங்கமலநாச்சியார் புரம் ரோட்டில் ரயில்வே கேட் உள்ளது. இதில் சாட்சியாபுரம் அதிகம் போக்குவரத்துக் கொண்ட பிரதான வெளியாக உள்ளது. இந்த வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ், பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது.தினமும் பத்துக்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் தொழிற்சாலைக்கு தொழிலாளர்கள், பல்வேறு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள் நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு தேவைகளுக்கு சுற்றுப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் ரயில்வே கேட்டை கடந்து வருகின்றனர்.ரயில் இயக்கப்படும் நேரங்களான காலை, மாலையில் கேட் அடைக்கப்படும் போது, கேட்டினை கடப்பதற்காக டூவீலர் கார்களில் விரைந்து வரும்போது விபத்து நேரிடுகிறது. காலை 8:15 லிருந்து 9:30 மணிக்குள் இரு ரயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் 40 நிமிடம் கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மதிய வேளையில் இரு முறை ரயில் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகள் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.மாலை 5:00 மணிக்கும் ரயில்வே கேட் அடைக்கப்படும் பொழுது வேலை முடிந்து, பள்ளி, கல்லுாரி முடிந்து வீட்டிற்குச் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக வருகின்ற ஆம்புலன்ஸ் இதனை கடந்து செல்ல வழி இல்லை. இந்த தாமதத்தால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.இதனால் சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு , நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. இதனைத் தொடர்ந்து நிலத்தை கையகப்படுத்தி நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டு நிலம் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது.அதே நேரத்தில் அக். ல் சாட்சியாபுரம் ரயில்வே கிராஸிங்கில் ஆய்வு செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு ரூ.64 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து தற்போது சாட்சியாபுரம் ரயில்வே கிராஸிங்கில் சுரங்கப்பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.தொடர்ந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் உள்ள கட்டடங்களை ஒரு மாதத்திற்குள் அகற்றுமாறு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் டிச. 6 ல் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் பகுதியில் மேம்பாலத்திற்கான துாண்கள் அமைக்கும் இடங்களில், மாற்றுப்பாதை அமைப்பதற்காக மண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்த கட்ட பணிகள் துவங்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட நில, கட்டட உரிமையாளர்களுக்கு கட்டடங்களை அகற்ற இருமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டு விட்டது. அடுத்த வாரத்தில் மீண்டும் ஒருமுறை நோட்டீஸ் வழங்கப்படும்.நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் கட்டட உரிமையாளர்கள் தாங்களாகவே அகற்றாவிட்டால் நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்படும். பாலம் அமைப்பதற்கான தோராய மதிப்பு குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒப்புதல் வழங்கியவுடன் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கும், என்றார்.தங்கப்பாண்டியன், தனியார் ஊழியர்: ஒவ்வொரு நாளும், மேம்பாலம் இல்லாமல் ரயில் வரும் நேரங்களில் ஏற்படும் டிராபிக்கால் மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். சரியான நேரத்திற்கு எங்கும் செல்ல முடியவில்லை. ரோடு குறுகியதாக இருப்பதால் கேட் திறந்தாலும் கடப்பதற்கு குறைந்தது 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது.சுரேஷ், சமூக ஆர்வலர்: ரயில்வே மேம்பாலம் அமைப்பது கனவாகவே போய்விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். முதல் கட்ட பணிகள் முடிவடைந்த பின்னரும் அடுத்த கட்டப்பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படுகின்றது. சிவகாசி மாநகராட்சி ஆக்கப்பட்ட நிலையில், மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டும்.
15 hour(s) ago
15 hour(s) ago