| ADDED : ஜன 22, 2024 04:36 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: சேலத்தில் நடந்த தி.மு.க., இளைஞரணி மாநாட்டிற்கு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பல அரசு பஸ்கள் சென்றதால் நேற்று மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.தை மாத முகூர்த்த நாளான நேற்றும், இன்றும் ஒவ்வொரு ஊரிலும் பல திருமண வைபவங்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு முதல் மக்கள் போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டது.இதில் நேற்று விடுமுறை நாள் என்பதாலும் ஏற்கனவே பொங்கல் பண்டிகைக்கு வந்து விட்டு தற்போது சென்னை, கோவை போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்லும் மக்களும் அதிகளவில் பயணித்தனர். இதனால் ஒவ்வொரு ஊர் பஸ் ஸ்டாண்டிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு டிப்போவிலும் குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 7 பஸ்கள் வரை ஒப்பந்த அடிப்படையில் சேலம் தி.மு.க., இளைஞரணி மாநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் ஒவ்வொரு வழித்தடத்திலும், வழக்கமான அளவு பஸ்கள் இயங்காததால், ஒவ்வொரு பஸ்சிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.மதுரை செல்லும் பஸ்கள் ராஜபாளையத்தில் நிரம்பி விட்டதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் பயணிகள் நிற்க கூட இடம் இன்றி தவித்தனர். இந்தநிலை மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் காணப்பட்டது.இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.