நுாறு நாள் வேலை திட்டத்தில் நடும் மரக்கன்றுகள் அழியும் அவலம்
சிவகாசி: ஊராட்சிப் பகுதிகளில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடப்படும் மரக்கன்றுகள் பராமரிக்கப்படாததால் அழிந்து வருகின்றது.மாவட்டத்தில் ஊராட்சிகளில் நுாறுநாள் வேலை திட்டத்தின் படி ஊராட்சிகளில் நீர்நிலைகள் பராமரித்தல் ஓடை துார்வாறுதல், முட்புதர்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. மேலும் ஊரணி குளம், கண்மாய் போன்ற நீர் நிலைகள் கரைகளிலும் ரோட்டோரத்திலும் மரக்கன்றுகள் நடும் பணியும் நடக்கிறது.அதன்படி முறையாக குழி வெட்டி மரக்கன்றுகள் நடப்பட்டு முள்வேலியும் போடப்படுகின்றது. பெரும்பாலான ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நட்ட நாள் மட்டுமே அதற்கு தண்ணீர் ஊற்றப்படுகின்றது.அதற்கடுத்து கண்டுகொள்ளப்படுவதில்லை. இதனால் மரக்கன்றுகள் தண்ணீர் இன்றி கருகி அழிந்து விடுகின்றது. ஒரு சில இடங்களில் முள்வேலிகள் சேதமடைந்த நிலையில் மரக்கன்றுகளை கால்நடைகள் இணைந்து விடுகின்றது. இதனால் இத்திட்டமே வீணாகின்றது. எனவே ஊராட்சிகளில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடப்பும் மரக்கன்றுகளை பராமரித்து வளர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.