| ADDED : நவ 25, 2025 02:51 AM
விருதுநகர்: விருதுநகரில் லாரி முனையம் அமைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் சர்வீஸ் ரோடு, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் லாரிகளால் விபத்து அச்சம், நகரில் போக்குவரத்து பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விருதுநகரில் உள்ள பருப்பு மில், எண்ணெய் ஆலைகள், வத்தல் கமிஷன் மண்டிகள், மில்களால் தொழில் நகரமாக மாறியுள்ளது. இதனால் தினசரி ஆயிரக்கணக்கில் கனரக லாரிகளில் மூலப்பொருட்கள், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கிருந்து லாரிகள் மூலம் துாத்துக்குடி துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி நடந்து வருகிறது. மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி இருபகுதிகளிலும் லாரி முனையம் வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள் களாக உள்ளது. இதை 2021 சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகளும் வாக்குறுதியாக வைத்து பிரசாரம் செய்தன. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாகியும் லாரிமுனையம் அமைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் லாரிகளை நிறுத்த இடமில்லாமல் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் உள்ள சர்வீஸ் ரோடு, விருதுநகர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள சர்வீஸ் ரோடு, புது பஸ் ஸ்டாண்ட் அருகே சாத்துார் ரோட்டின் ஓரங்களில் லாரிகளை நிறுத்துகின்றனர்.இதனால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. மாவட்டம் வழியாக நான்கு வழிச்சாலை செல்வதால் பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு சரக்குகள், உணவுப்பொருட்களை கொண்டு செல்லும் டிரைவர்கள், கிளீனர்கள் தங்கி ஓய்வு எடுத்துச் செல்ல கூட வசதிகள் இல்லை. எனவே விருதுநகரில் லாரி முனையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை அடுத்தாண்டு தேர்தலுக்குள் எடுக்க வேண்டும்.