விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் திருக்கார்த்திகை தீப விழாவையொட்டி கோயில்கள், வீடுகளில் தீபமேற்றியும் சொக்கப்பனை தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில், பராசக்தி மாரியம்மன் கோயில், மீனாட்சி சொக்கநாதர் கோயில், ராமர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மாலை 6:00 மணிக்கு நடந்து சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட்டது. வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரவு 10:00 மணிக்கும், வெயிலுகந்தம்மன் கோயி லில் இரவு 9:30 மணிக்கும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. * ராஜபாளையத்தில் சஞ்சீவி மலை குமாரசாமி கோயில் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சொக்கர் கோயில் வளாகத்தில் உள்ள ஐயப்ப சுவாமி கோயில் பூஜைகளும் சுற்றுப்பகுதி சிவன், மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. *சாத்துார் முருகன் கோயில், சோமசுந்தர விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிதம்பரேஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், கிருஷ்ணன் கோயில் மற்றும் வெங்கடாஜலபதி கோயில்களில் அதிகாலை முதலே சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் பூஜையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோயில்களின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த சொக்கப்பனைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதில் தீபம் ஏற்றப்பட் டது. * ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நேற்று மாலை 6:00 மணிக்கு சுப்ரமணியர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் முன்பு சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. மூவரைவென்றான் மலைக் கொழுந்து ஈஸ்வரர் கோயிலில் நேற்று மாலையில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பழனி ஆண்டவர், பெரிய மாரியம்மன், நத்தம்பட்டி வழி விடு முருகன், வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோயில்களில் திருக்கார்த்திகை வழிபாடு நடந்தது. ஆண்டாள் கோயிலில் இன்று திருக்கார்த்திகை வழிபாடு நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள் எழுந்தருளலும், சொக்கப்பனை தீபம் ஏற்றுதலும் நடக்கிறது.