உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 50 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள்  பாரபட்சம்! புதிதாக துவங்கிய புறநகர் பகுதிகளுக்கு அதிக நிதி ஒதுக்கும் நிலை

50 ஆண்டுகளாகியும் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள்  பாரபட்சம்! புதிதாக துவங்கிய புறநகர் பகுதிகளுக்கு அதிக நிதி ஒதுக்கும் நிலை

அருப்புக்கோட்டை, - மாவட்டத்தில் பல ஊராட்சிகளில் 50 ஆண்டுகளை கடந்தும் அடிப்படை வசதிகள் செய்ய நிதி ஒதுக்குவதை தவிர்த்து புதியதாக துவங்கப்பட்டபுறநகர் பகுதிகளுக்கு நிதியை ஒதுக்கி பாரபட்சம் காட்டியதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களும், 450 ஊராட்சிகளும் உள்ளன. இவற்றில் வளர்ச்சிப் பணிகள் செய்ய மத்திய, மாநில அரசு நிதி ஒதுக்குவது வழக்கம். பல ஊராட்சிகளுக்கு கட்டுப்பட்ட கிராமங்களில் 50 ஆண்டுகளைக் கடந்த இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றன. மாவட்டத்தில் மக்களிடமிருந்து வந்துள்ள மனுக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கையும் மனுக்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து வளர்ச்சி பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு, இதற்கான நிதி கோடிக் கணக்கில் ஒதுக்கப்பட்டது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கிராமங்களில் பேவர் பிளாக் கல் பதிக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டது. ஒதுக்கிய நீதி முழுவதும் பேவர் பிளாக் கல் ரோடு அமைக்க மட்டும் என்பதால், பிற அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் உள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30 ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்கள் உள்ளன. இவற்றைக் கண்டறிந்து அனைத்து கிராமங்களுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியை பகிர்ந்து அதற்கான வளர்ச்சி பணிகள் செய்யப்படவில்லை. தொட்டியாங்குளம், குறிஞ்சாக்குளம், செம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால் புதிதாக வந்துள்ள பாலையம்பட்டி அருகே உள்ள புறநகர் பகுதிக்கு 4 கோடி ரூபாயும், பந்தல்குடி அருகே 1 கோடி 30 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே ஊராட்சிக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கியுள்ளனர். இதில், அரசியல் தலையீடு காரணமாக வளர்ச்சிப் பணிகள் செய்ய நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டியுள்ளனர். தேர்தல் வர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், வளர்ச்சிப் பணிகள் செய்ய கடைசியாக ஒதுக்கப்பட்ட நிதியில், அவதிப்படும் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாமல் விட்டுவிட்டனர். மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து,ஒதுக்கப்பட்ட நிதியை பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் தேவைப்படும் கிராமங்களுக்கு வளர்ச்சி பணிகள் செய்ய முனைப்பு காட்ட வேண்டும். அடிப்படை வசதிகள் செய்ய ஒதுக்கப்படும் நிதியில் பாரபட்சம் காட்டினால், வருகிற தேர்தலில் மக்கள் பார பட்சம் காட்டி விடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை