| ADDED : ஜூலை 25, 2011 10:18 PM
சிவகாசி : மண்ணெண்ணெய் வழங்க கோரி திருத்தங்கல் பங்கில் மண்ணெண்ணெய் கிடைக்காதவர்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர். காஸ் இணைப்பு இல்லாதவர்கள், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் கடை மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. திருத்தங்கலில் உள்ள 7 ரேஷன் கடைகளுக்கு உரிய 6000 ரேஷன் கார்டுகளுக்கு ,அங்குள்ள பங்கு மூலம் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது. இம் மாதம் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 76.4 சதவீதமாக குறைத்ததால், முதலில் வந்தவர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் பெற்றனர். 1500 கார்டுதாரர்கள் மண்ணெண்ணெய் பெற முடியவில்லை.
நேற்று திருத்தங்கல் பங்கில் மண்ணெண்ணெய் வழங்க கோரி கடையை 100 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த முனுசாமிஆர்.டி.ஓ., சிவில்சப்ளை தாசில்தார் ரங்கசாமி பேச்சு வார்த்தை நடத்தினர். 'மண்ணெண்ணெய் வாங்காத கார்டுதார்களுக்கு உடனே டோக்கன் வழங்கப்படும். அடுத்த மாத ஒதுக்கீட்டில் டோக்கன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கி விநியோகிக்கப்படும். 100 சதவீத ஒதுக்கீடு கிடைத்தால் ஒவ்வொரு மாதமும் அனைவருக்கும் வழங்கப்படும்,' என்றனர். இதை தொடர்ந்து அனைவரும் திரும்பினர்.