| ADDED : செப் 20, 2011 09:32 PM
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் டாஸ்மாக் கடைகளால் பொதுமக்கள்
அவதிப்படு கின்றனர். இதன் கடைகளை வேறு இடத்திற்கு மாற்றவும் கோரியுள்ளனர்.அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில், குறுகிய இடைவெளி விட்டு மூன்று
டாஸ்மாக் கடைகள் உள்ளன. இப்பகுதியில் அதிக தெருக்கள், தனியார்
ஆஸ்பத்திரிகள் உள்ளன. சொக்கலிங்கபுரம் சொக்கநாதர் கோயில், பள்ளிகள்,
பாலிடெக்னிக்கும் உள்ளன. இந்த ரோட்டில் ஆயிரக்கணக்கான மாணவர்கள்,
ஆஸ்பத்திரி செல்லும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். வரிசையாக டாஸ்மாக்
கடைகள் இருப்பதால் குடிமகன்களின் தொல்லை அதிகம் உள்ளது. பகல், இரவு நேரம்
என்றில்லாமல், கடைகளில் கூட்டம் வழிகிறது. இரவு நேரங்களில் அதிக போதையில்
வருவோர், இடம் தெரியாமல் தெருக்களில் உள்ள வீடுகளின் வாசல்படியில் படுத்து
விடுகின்றனர். ஒருசில குடிமகன்கள், போதையில் ஆஸ்பத்திரி வராண்டாவில்
படுக்கின்றனர். இதனால், நோயாளிகளும், பொதுமக்களும் அவதிபடுகின்றனர்.
கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும்போது, அருகில் இருக்கும் வீடுகளின்
வாசல்படியில் உட்கார்ந்தப்படி மதுவை குடிக்கின்றனர். வீடுகளுக்கு அருகில்
கடை இருப்பதால், அதிக போதையில் வாசல்படியில் படுத்து கிடக்கும்
குடிமகன்களின் முகத்தில் தான் மறுநாள் அதிகாலையில் பெண்கள் முழிக்க
வேண்டியுள்ளது. பகல் நேரத்தில் போதையில் தள்ளாடும் குடிமகன்களை பார்த்து,
பள்ளி மாணவிகள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து வருவாய் மற்றும் போலீஸ்
துறை நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஒதுக்குபுறத்தில் அமைக்க
வேண்டும்.