விருதுநகர்: ரோட்டோர சில கடைகள் முதல் ஓட்டல்கள் வரை ஐஸ்கிரீம், சர்பத், குளிர்பானம், ரோஸ் மில்க், சிக்கன் உள்ளிட்ட அனைத்து உணவுகளிலும் செயற்கை வண்ணங்கள் கலப்பதால் அவற்றை உண்ணும் போது உடல்நலம் பாதிப்பதோடு புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாவட்டத்தில் குழந்தைகளை கவரும் வகையில் ரோஸ்மில்க், பஞ்சுமிட்டாய், வண்ண மிட்டாய்கள், ஐஸ்கிரீமில் பச்சை, ஊதா நிறங்கள், சர்பத்தில் வண்ண நிறங்கள் அனுமதி இல்லாத செயற்கை நிறங்களாக சேர்க்கப்படுகின்றன. இதன் மூலம் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.சில தள்ளுவண்டிகளில் விற்கும் ஐஸ்கிரீம்களும் தரமற்றதாக இருந்தால் சாப்பிடக்கூடாது. குழந்தைகளையும், இளைஞர்களையும் கவரும் வண்ணங்களில் நிறங்கள் சேர்ப்பதால் எச்சரிக்கை தேவைப்படுகிறது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜன் கூறியதாவது: மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.குழந்தைகள், சிறுவர்கள் மனதை கவரும் வகையில் அதிகளவில் செயற்கை வண்ணமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் விற்கபடுகின்றன. திருவிழாக் காலங்கள், பொருட்காட்சிகளில் அதிகளவு செயற்கை வண்ண மூட்டப்பட்ட மிட்டாய், இனிப்பு, கார வகைகள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், கேக் வகைகள் போன்றவை விற்கப்படுகின்றன. இவற்றை உட்கொள்வதால் வயிற்று உபாதைகள், அஜீரண கோளாறுகள், கல்லீரல், சிறுநீரக கோளாறுகள், புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. எனவே பொதுமக்கள் இது போன்ற அனுமதி இல்லாத செயற்கை வண்ணமூட்டப்பட்ட உணவு பொருட்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் அனுமதி இல்லாத செயற்கை வண்ணமூட்டப்பட்ட உணவு பொருட்களை எடுத்து ஆய்விற்கு அனுப்பப்பட்டு 19 உணவு பொருள் நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இவற்றில் சாக்டே், பிஸ்கட், இனிப்பு, காரவகைகள், சில்லி சிக்கன், மசாலா பொருட்கள், டீத்துாள் போன்றவை அடங்கும். இது போன்ற உணவு பொருட்களை தயாரித்து விற்பதற்கு சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.பொதுமக்கள் அனுமதி இல்லாத செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்ட உணவு பொருட்கள், கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற மாநில உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது 04562 252252 என்ற மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் அலுவலக தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.