தொடர்ந்து அதிகரித்து வரும் நீர் மாசு; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ராஜபாளையம்; வீடுகளில் இருந்து வெளியேறும் திட, திரவ கழிவுகளை முறையாக அகற்றாமல் நீர்நிலைகளில் கலப்பதின் மூலம் நிலத்தடி நீர் மாசு அதிகமாகி சுகாதார பாதிப்பு ஏற்படுத்துகிறது.அரசு சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் குடிநீர் முன்னிலை வகிக்கிறது. இதற்கான நீர் ஆதாரங்களான ஆறுகள், கண்மாய், ஊருணி, ஓடை என நீர் செறிவு உள்ள பகுதிகளில் ஆழ்துளை குழாய்கள், கிணறுகள் மூலம் நீரினை பெற்று சமாளித்து வருகிறோம்.இயற்கையாக மழை மூலம் பெறும் சுத்தமான நீரினை முறையாக சேமிக்க தவறுவதும், கழிவுகளை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் சுலபமான பணியாக நீர் ஆதாரங்களில் கலக்க விடுவதும், இயற்கை நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறுவது போன்ற செயல்களால் நிலத்தடி நீரின் தரம் குறைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.தொடர்ந்து அதிகரித்து வரும் நிலத்தடி நீர் மாசினால் நாளுக்கு நாள் உருவாகும் புதிய பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை வகுத்து வருகிறது. இருப்பினும் நடைமுறையில் கழிவுகள் வெளியேற்றும் பணிகளில் உள்ள சிக்கலை தற்காலிக தீர்வாக கருதி நீர் ஆதாரங்களில் கலக்க விடும் அதிகாரிகளின் செயலை கட்டுப்படுத்துவதன் மூலம் நீர் மாசை குறைக்க முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.