உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ராஜபாளையம், கோவையில் பதிவான வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின் பறவை

 ராஜபாளையம், கோவையில் பதிவான வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின் பறவை

ராஜபாளையம்: தமிழகத்தில் ராஜபாளையம் ,கோவையில் மட்டும் அரிய வகை பறவையான வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின் எனும் பறவை பதிவாகி உள்ளது நீர்பறவைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒருங்கிணைந்த நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு டிச. 27, 28 இரண்டு நாட்கள் நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் தேவதானம், ஸ்ரீவில்லிபுத்துார், இருக்கன்குடி, கூமாபட்டி, பெரியார் அணை, குல்லுார் சந்தை, வெம்பக்கோட்டை அணை உள்ளிட்ட 21 நீர்நிலைகளில் கணக்கெடுப்பு நடந்தது. பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தன்னார்வர்கள், வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் ராஜபாளையம் பகுதி தேவதானம் சாஸ்தா கோயில், 6 வது மைல் நீர்த்தேக்கம், அதனை அடுத்து உள்ள இரட்டை கண்மாய் பகுதிகளில் இரண்டு நாட்களாக பறவை ஆர்வலர்கள் நீர்ப்பறவைகள் குறித்து பதிவு செய்தனர். இதில் தமிழகத்திலேயே கோயம்புத்துார், ராஜபாளையத்தில் ஐரோப்பாவை தாயகமாக கொண்ட வெஸ்டர்ன் ஹவுஸ் மார்ட்டின் கண்டறியப்பட்டது. தவிர அரிய வகை பறவைகளான சிறிய சீழ்க்கை சிறகி, மஞ்சள் கண் சிலம்பன் போன்ற இனங்களும் பதிவாகியுள்ளன. வெஸ்டன் ஹவுஸ் மார்ட்டின் குறித்து பறவை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்,'' இவ்வகை பறவை ஐரோப்பாவை சேர்ந்தது. நீல நிற தலை மற்றும் மேல் பகுதி வெள்ளை துாய வெள்ளை நிற அடிப்பகுதியை கொண்டுள்ளது. தொடர் இடற்பெயர்வுகளால் வட ஆப்பிரிக்கா, பாலியார்கிட்டிக் முழுவதும் இனப்பெருக்கத்திற்கும் குளிர்காலத்தில் வெப்ப மண்டல ஆசியாவிலும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இடம் பெயரும். பொதுவாக பறந்த நிலையிலேயே சிறிய பூச்சிகளை உண்ணும் இயல்பு கொண்டது. இது மனித வாழ்விடத்திற்கு அருகில் கோப்பை போன்ற வடிவில் ஈரமான மண்ணால் கூடுகட்டுகிறது.,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை