உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கட்சிக்காரர்களின் சுப நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் ராட்சத பிளக்ஸ் பேனர்கள் கவனிக்குமா போலீஸ்துறை

கட்சிக்காரர்களின் சுப நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் ராட்சத பிளக்ஸ் பேனர்கள் கவனிக்குமா போலீஸ்துறை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசியல் கட்சிக்காரர்களின்சுப நிகழ்ச்சிகளுக்காக ராட்சத பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்து வருகிறது. போலீசார் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகம் முழுவதுமே பிளக்ஸ் பேனர் கலாசாரம் தலைதுாக்கி உள்ளது. 2019ல் அ.தி.மு.க., பிரமுகர் குடும்ப திருமண நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் சரிந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இதையடுத்து உயர்நீதிமன்றம் கடுமையான வழிகாட்டுதல்கள் வழங்கி நடைபாதைகள், மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதித்தது. இந்நிலையில் 2020, 21ல் கொரோனா காரணமாக பிளக்ஸ் பேனர் புழக்கம் பெரிய அளவில் இல்லை.இந்த சூழலில் கடந்த 2 ஆண்டுகளாக கட்சி பொதுக்கூட்டங்கள், திருமண நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் பேனர்கள் கலாசாரம் மெல்ல மெல்லஅதிகரித்து வருகின்றன. குறிப்பாக கட்சிக்காரர் திருமண நிகழ்வு என்றால் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட ராட்சத உயரத்தில் பேனர்களை வைக்கின்றனர். அதுவும் குறிப்பாக ரோட்டின் ஓரங்களில்.இவற்றை சரிவர கட்டாமல் விடுவதால் காற்றில் பறந்து சரியும் வாய்ப்புள்ளது.குறிப்பாக விருதுநகரில் அருப்புக்கோட்டை ரோட்டில் நிறைய திருமண மண்டபங்கள் உள்ளன. கட்சி பிரமுகர்களை வரவேற்று வைக்கப்பட்டிருக்கும் இந்த ராட்சத பேனர்கள் சரிந்தால் நிச்சயம் டூவீலரில் செல்வோர் விபத்தை சந்தித்து காயமடைவர்.இவ்வாறு வைக்கப்படும் பேனர்கள் ஒரே நாளில் அகற்றப்பட்டாலும், இவ்வளவு உயரத்திற்கு வைக்க போலீசார் அனுமதிப்பது விபத்துக்கு தான் வழிவகுக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., என இரு கட்சியினரின் சுப நிகழ்ச்சிகளிலும் இந்த தொல்லை அதிகளவில் உள்ளது.மேலும் பேனர் கட்டுவோர் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் இரவில் பேனர் பின்புறம் உள்ள பகுதிகளில் மது குடிக்கின்றனர். பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்கள் தாள்களை போட்டு விட்டு செல்கின்றனர். ஆகவே அதிக உயரத்திலான ராட்சத பேனர்கள் வைப்பதை போலீசார் அனுமதிக்க கூடாது. கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி