விருதுநகர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே மிஷின்கள் அறைகளுக்கான பணிகள் நிறைவு
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே மிஷின்களை முழு செயல்பாட்டிற்கு கொண்டுவர தேவையான பணிகளை செய்வதில் பொதுப்பணித் துறையினர் அலட்சியமாக செயல்படுவது தொடர்பாக தினமலர் நாளிதழில் ஜூலை 1ல் செய்தி வெளியானது. இதையடுத்து தீவிரமாக பணிகள் துவக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைக்கு அனைத்து பகுதிகளில் இருந்து வரும் உள்,வெளி நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்களில் தினசரி 200க்கும் மேற்பட்டோருக்கு ரூ. 50 கட்டணத்தில் எக்ஸ்ரே பரிசோதனை எடுக்கப்படுகிறது. மேலும் பரிசோதனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ரூ. 80 லட்சத்தில் 4 எக்ஸ்ரே மிஷின்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் மூலமாக வாங்கப்பட்டது. இந்த மிஷின்களை அதற்கான அறைகளில் பொருத்தி முழு செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்காக எலக்ட்ரிக்கல், தரைதளம் அமைத்தல் உள்பட தேவையான பல்வேறு பணிகள் பொதுப்பணித்துறையினரால் செய்யப்பட்டது. ஆனால் பணிகளை முறையாக செய்து முடிக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டு இருந்தனர். இதனால் புதிய 4 மிஷின்களை முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் மாதக்கணக்கில் அப்படியே வைக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினரின் அலட்சியத்தால் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட மிஷின்கள் பயன்படுத்த முடியாமல் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது என தினமலர் நாளிதழில் ஜூலை 1ல் செய்தி வெளியானது. இதையடுத்து பொதுப்பணித்துறையினரால் உடனடியாக பணிகள் துவங்கப்பட்டு எக்ஸ்ரே மிஷின்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர தரைதளம், டைல்ஸ் பதிக்கும் பணிகள் உள்பட தேவையான பணிகள் முடித்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது எக்ஸ்ரே மிஷின்களை பொருத்தி விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.