எழுமலை : எம்.கல்லுப்பட்டியில், ஓட்டுக்கு பணம் கொடுத்த, சேடபட்டி முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மனைவி தலைமறைவானார். மருமகளும் பேரனும் கைது செய்யப்பட்டனர். 44 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், சேடபட்டி சட்டசபை தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் தவமணித்தேவர். இவரது மனைவி பின்னியம்மாள், சேடபட்டி ஊராட்சி ஒன்றியம், 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இவரது மருமகள் ரூபி அருள்மொழி, பேரன் வினோத்குமார் ஆகியோர், எம்.கல்லுப்பட்டி பகுதியில் பின்னியம்மாளுக்கு ஓட்டுப் போடக் கூறி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இது குறித்து, வி.ஏ.ஓ., நாகசுந்தரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எழுமலை போலீசார், ரூபி அருள்மொழி, வினோத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, 44 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னியம்மாள் தலைமறைவாகி விட்டார்.