உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்ட ஊராட்சிக்குழு பதவி : பல லட்சம் செலவழிக்கும் கட்சியினர்

மாவட்ட ஊராட்சிக்குழு பதவி : பல லட்சம் செலவழிக்கும் கட்சியினர்

சேலம்: கிராமப்புற மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிகள், தமிழகத்தை பொறுத்தமட்டில் டம்மியாகவே உள்ளன. எந்தவித திட்டப்பணியையும் நிறைவேற்ற முடியாமல், இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பெயரளவுக்கு கூட்டத்தை நடத்தி விட்டு, கிடைக்கும் பேட்டாவை பெற்று செல்லும், கவுரவ பதவியாக உள்ளது. தலைவர் பதவியை பொறுத்தமட்டில் பெயரளவுக்கு மட்டுமே. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்படும். தலைவருக்கு, 2,300 ரூபாய் படியும், கவுன்சிலர்களுக்கு, 1,300 ரூபாய் படியும் வழங்கப்படும். திட்டப்பணியை பொறுத்தமட்டில், இவர்களாக நிறைவேற்ற முடியாது. தீர்மானம் வைத்து, அவற்றை ஊராட்சி ஒன்றியத்துக்கு அனுப்ப வேண்டும். மாதம்தோறும் அரசு மூலம், 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில், அத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள், வாகனச் செலவு போக, மீதமுள்ள பணத்தை திட்டப்பணிகள் மேற்கொள்ளலாம். அதுவும், ஒன்றிய அடிப்படையில் மேற்கொள்வதால், ஊராட்சி கவுன்சிலர்களுக்கு பலனில்லை. மூன்று மாதத்துக்கு ஒரு முறை திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஊராட்சிக்குழு தலைவர், அக்குழுவின் தலைவராகவும், மாவட்ட கலெக்டர் துணைத்தலைவராகவும் இருப்பர். பெரும்பாலான, மாவட்டங்களில் அத்தகைய கூட்டம் நடத்தப்படுவதில்லை. சுழல் விளக்கு பொருத்திய காரில், வலம் வந்த ஊராட்சிக்குழு தலைவர்களிடம் இருந்து, சுழல் விளக்கும் பறிக்கப்பட்டு விட்டது. உள்ளாட்சி தேர்தலில், ஐந்து லட்சம் வரை செலவு செய்து பதவியை பிடிப்போருக்கு, திட்டப்பணிகளில் கமிஷன் கிடைத்தால் மட்டுமே பதவி இனிக்கும். அந்த வகையில், மாவட்ட ஊராட்சிக்குழுவில், போதுமான வருவாய் இல்லாததால், அந்த பதவியை பிடிக்க யாரும் அக்கறை காட்டுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ