சிவகங்கை:உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் போது, 3 வாகனங்களுக்கு மேல் செல்ல தமிழக தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்காக அந்தந்த மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சிகளும் துவங்கிவிட்டன.பாதுகாப்பு: தேர்தலின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
அதன்படி,தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சி தலைவர்கள் வந்தால் கூட 3 வாகனங்களுக்கு மேல் செல்ல போலீசார் அனுமதிக்க கூடாது. புதிதாக துப்பாக்கி லைசென்ஸ் கேட்பவர்களுக்கு அனுமதி தரக்கூடாது. ஏற்கனவே பல ஆண்டுகளாக லைசென்சுடன் துப்பாக்கி வைத்திருந்தாலும், அவர்களது துப்பாக்கிகளை தேர்தல் முடியும் வரை போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கவேண்டும். பிரச்னைக்குரிய ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்.அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தனிப்பட்ட முறையில் பிற கட்சி தலைவர்கள், வேட்பாளர்களை இழிவாக பேசி பிரசாரம் செய்ய அனுமதிக்க கூடாது என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
வாய்திறக்க கூடாது: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வேட்பாளர்களிடமிருந்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்களை வாங்க வேண்டும். வேட்புமனுக்களுடன் வருபவர்களிடம், நோட்டரி பப்ளிக் கையெழுத்திட்ட 'அபிடவிட்'களை மறக்காமல் வாங்கவேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வேட்பாளர்களிடம் வேட்பு மனுவை வாங்குவதற்கு முன் அவற்றை சரி பார்க்க வேண்டும். மனுவை சரிபார்க்கும் போது மிக கவனமாக செயல்பட வேண்டும். மனுவில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து விட்டாரா என பார்க்கலாம். ஆனால், அதில் தவறு இருந்தால் திருத்தி தருமாறோ, தவறு இருக்கிறது என வேட்பாளரிடம் வாய் திறக்கவோ கூடாது. கொடுக்கும் வேட்புமனுவை அப்படியே வாங்கி வைக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.