| ADDED : ஆக 28, 2011 12:00 AM
வேலூர்: விரைவில் தூக்குக் கயிற்றை சந்திக்க உள்ள முருகனை சந்திக்க, அவர் மனைவி நளினி, மகள் ஹரித்திரா ஆகியோர் நாளை, வேலூர் வருகின்றனர்.ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவருக்கும் செப்டம்பர் 9ம் தேதி, வேலூர் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மூவரின் குடும்பத்தினருக்கும், சிறைத் துறையினர் முறைப்படி தகவல் கொடுத்துள்ளனர்.மூன்று பேரையும் தூக்கில் போட்ட பிறகு, அவர்கள் உடலைப் பெற்றுச் செல்லும்படி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, முருகன் மனைவி நளினி, மகள் ஹரித்திரா ஆகியோர் முருகனை சந்திக்க, வரும் 29ம் தேதி வேலூர் வருகின்றனர்.தற்போது, நளினி சென்னை புழல் சிறையில் உள்ளார். முருகனை சந்திப்பது தொடர்பான மனுவை, புழல் சிறை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். அதே போல, கனடாவில் இருக்கும் ஹரித்திராவும், வேலூர் அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.அதே போல பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், தந்தை குயில் தாசன் ஆகியோரும், நாளை வேலூர் சிறைக்கு வந்து, பேரறிவாளனை சந்திக்கின்றனர்.