சென்னை:தமிழகத்தின் வட மாவட்டங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி, 48 போலி டாக்டர்களை கைது செய்தனர். அவர்கள் நடத்தி வந்த, 'கிளினிக்'குகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இச்சோதனை நடத்தப்பட்டது.'பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, நர்சிங் படித்தவர்கள் பலர், தங்களை எம்.பி.பி.எஸ்., டாக்டர் எனச் சொல்லி, கிளினிக் நடத்தி வருகின்றனர். தகாத உறவு மூலம் கர்ப்பமடையும் பெண்களுக்கு, அதிக பணம் பெற்றுக் கொண்டு, இந்த, 'கிளினிக்'குகளில் பிரசவம் பார்க்கின்றனர். உரிய பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்தானது.
மேலும், தவறான உறவுகளில் பிறக்கும் குழந்தைகளை, இப்போலி டாக்டர்கள், அதிக விலைக்கு விற்று வருகின்றனர்' என, போலீசாருக்கு புகார் வந்தது.இப்புகாரை தொடர்ந்து, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூர் கிராமத்தில், முருகன் என்பவர் ஆர்.ஐ.எம்.பி., என போலியாக மருத்துவ சான்றிதழ் பெற்று, 'கிளினிக்' நடத்தி வருவது தெரிந்தது.
மேலும், தகாத உறவில் கர்ப்பமடைந்த கிருஷ்ணவேணிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அவரது கிளினிக்கில் பிரசவம் பார்த்துள்ளதும், பிறந்த குழந்தையை அனாதை இல்லத்தில் சேர்க்க, கிருஷ்ணவேணியிடம் அவர், 20 ஆயிரம் ரூபாய் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து, போலி டாக்டர் முருகனை, போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணவேணியையும், அவரது குழந்தையையும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதைத் தொடர்ந்து, வட மாவட்டங்களில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதில், 49 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
எங்கே? எவ்வளவு பேர்?காஞ்சிபுரம்-17திருவள்ளூர்- 8வேலூர்-14திருவண்ணாமலை-9
'அதிரடி'க்கு ஓராண்டு தாமதம்ஏற்பட்டதன் பின்னணி:எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள், மருத்துவக் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்ற சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி டாக்டர்கள், அரசிடம் பதிவு பெற்ற பாரம்பரிய வைத்தியர்கள் ஆகியோர் மருத்துமனைகள், கிளினிக்குகள் நடத்த அனுமதி உண்டு.
ஆனால், கம்பவுண்டர்கள், மருத்துவமனைகளில் எடுபிடிகளாக வேலை பார்த்த பலர், போலியாக ஆர்.ஐ.எம்.பி., சான்றிதழ் பெறுகின்றனர். பின், தங்களது அனுபவத்தைக் கொண்டு மருத்துவமனைகளை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுபோன்று, 25 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய டாக்டர்கள் சங்கம், தமிழக அரசிடம் கடந்த ஆண்டு புகார் கொடுத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார், 2,000 பேரை கைது செய்தனர். ஆனால் தவறுதலாக, சித்தா, ஆயுர்வேத, பட்டதாரி மருத்துவர்களும் கைது செய்யப்பட்டதால் விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இதனால், போலி டாக்டர்கள் மீது நடவடிக்கையில் தேக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து, அகில இந்திய சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்க தலைவர் செல்வின் தாஸ் கூறியதாவது:''போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு சிகிச்சை அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம். ஆனால், சித்தா, ஆயுர்வேத வைத்தியம் செய்யும் எல்லாரும் போலி எனக் கருதக் கூடாது. மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்ற சித்தா, ஆயுர்வேத டாக்டர்கள் மீது தவறுதலாக நடவடிக்கை எடுக்கக் கூடாது,'' என்றார்.தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் பிரகாசம் கூறும்போது, ''இதுபோன்று போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்