உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10,000 கி.மீ., ஊரக சாலைகள் மேம்படுத்த ரூ.4,000 கோடி ஒதுக்கீடு

10,000 கி.மீ., ஊரக சாலைகள் மேம்படுத்த ரூ.4,000 கோடி ஒதுக்கீடு

சென்னை: ''இரண்டு ஆண்டுகளில், 10,000 கி.மீ., நீளமுள்ள ஊரக சாலைகள், 4,000 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்,'' என, சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அவரது அறிவிப்பு:முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம், 2023 ஜன., 13ல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில், 10,000 கி.மீ., நீளமுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள் மற்றும் கிராம ஊராட்சி சாலைகளை மேம்படுத்த, 4,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது வரை 8,120 கி.மீ., நீளமுள்ள ஊரக சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், நபார்டு ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் சாலைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் கீழ், கடந்த மூன்று ஆண்டுகளில், 16,596 கி.மீ., நீளமுள்ள சாலைகள் மற்றும் 425 உயர்மட்ட பாலங்கள் அமைக்க, திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் மொத்த மதிப்பு, 9,324 கோடி ரூபாய். இதை தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரும் இரண்டு ஆண்டுகளில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் வழியாக கூடுதலாக, 10,000 கி.மீ., நீளமுள்ள ஊரகச் சாலைகள், 4,000 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

முதல்வருக்கு நன்றி தெரிவித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, ம.தி.மு.க., சதன் திருமலைகுமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பாலாஜி, பா.ஜ., நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் செல்வப்பெருந்தகை, பா.ம.க., ஜி.கே.மணி ஆகியோர் பேசினர்.'எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைக்கும் ஊரக சாலைப் பணிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லது இன்னும் கூடுதல் நிதியை ஒதுக்கி, எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை செய்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தினர்.அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ''தொகுதியில் நடக்கும் அனைத்து பணிகளையும் ஆய்வு செய்ய, கருத்துக்கள் தெரிவிக்க, எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிகாரம் உள்ளது,'' என்றார்.வேல்முருகன் பேசுகையில், ''அமைச்சர் கூறியதை முழு மனதோடு ஏற்கிறோம். அரசு பணிகளை எம்.எல்.ஏ., பரிந்துரையோடு செய்ய வேண்டும்,'' என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், ''எந்த கிராமத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, எம்.எல்.ஏ.,க்கள் தெரிவிக்கலாம்,'' என்றார்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ