| ADDED : ஆக 04, 2024 12:17 AM
சென்னை:தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளில், 17,017 மொபைல் போன்கள் திருடு போனதாக, காவல் துறையின் மாநில குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னை சூளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்; சமூக ஆர்வலர். இவர், ஏப்., 20ல், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக, ஐந்து ஆண்டுகளில், குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், மொபைல் போன் திருட்டு தொடர்பாக பதிவான வழக்குகள் எத்தனை என்ற விபரம் கேட்டுள்ளார்.இதற்கு, காவல் துறையின் மாநில குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் அளித்துள்ள பதில்:தமிழகத்தில், 2018 முதல் 2022 வரை, 17,017 மொபைல் போன்கள் திருடு போய் உள்ளன. அவற்றில், 7,984 மொபைல் போன்களை மீட்க முடியவில்லை. 2023ம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் சரிபார்ப்பு நிலையில் உள்ளன. மாவட்ட வாரியான தகவல்கள் எங்களிடம் இல்லை. மாவட்ட, மாநகர தலைமையகங்களில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல, ஐந்து ஆண்டுகளில், பெண்களிடம் நகை பறிப்பு தொடர்பான வழக்குகள் குறித்த விபரங்களையும் சசிகுமார் கேட்டுள்ளார். அதற்கு தங்களிடம் தகவல் இல்லை. மாவட்ட, மாநகர தலைமையகங்களில் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.