கள்ளக்குறிச்சி:சம்மன் வழங்கச் சென்ற போலீசாரை தாக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிந்து, 3 பேரை கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி தாலுகா, கனங்கூரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 51; விவசாயி. தென்பொன்பரப்பியை சேர்ந்தவர்கள் செல்வம் மகன்கள் ராஜா, 33; சுரேஷ், 30; இருவரும் கடந்த மார்ச் 16ம் தேதி மாடு வாங்க கனங்கூருக்குச் சென்றனர்.அங்கு சக்கரவர்த்தி மட்டுமின்றி அதே பகுதியைச் சேர்ந்த ஆரான், சின்னபையன், வெங்கடேசன் ஆகியோரது மாடுகளையும் விலை பேசி முன் பணமாக குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளனர்.மீதி பணம் ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 500 ரூபாயை பிறகு தருவதாக கூறி மாடுகளை ஏற்றி சென்றனர்.பல முறை பணம் கேட்டும் தராமல் ஏமாற்றியதால், சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் ராஜா, சுரேஷ் மீது வரஞ்சரம் போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர். இருவர் மீதும், ஏற்கனவே பலரிடம் மாடு வாங்கி ஏமாற்றியதாக பல வழக்குகள் வரஞ்சரம் போலீசில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில், இருவருக்கும் பழைய வழக்குக்காக சம்மன் அளிக்க வரஞ்சரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, போலீசார் பிரபு, விஜயன் ஆகியோர் தென்பொன்பரப்பி கிராமத்திற்கு நேற்று சென்றனர்.அங்கு, சம்மன் வாங்க மறுத்து ராஜா உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து, தாக்கினர்.இதுகுறித்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை அளித்த புகாரின் பேரில், ராஜா, சுரேஷ், பாவாடை மகன் செல்வம், இவரது மனைவி மின்னல்கொடி, 45; ராஜா மனைவி வெண்ணிலா ஆகிய 5 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜா, சுரேஷ், மின்னல்கொடி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.