| ADDED : செப் 06, 2011 10:37 PM
மதுரை:தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் 'பொட்டு' சுரேஷ், குண்டாசில் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை தான் என, நீதிபதிகள் ஆலோசனைக் குழுமம் உறுதி செய்தது.குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள், ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். 'பொட்டு' சுரேஷ் மீது பல வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் மீது உள்ள குண்டாஸ் சட்டத்தை ரத்து செய்வதா அல்லது வேண்டாமா என்பது குறித்து, நீதிபதிகள் பங்கேற்ற ஆலோசனைக் குழுமம், நேற்று சென்னையில் கூடியது.நீதிபதிகள் ராமன், மாசிலாமணி, ரகுபதி பங்கேற்றனர். அப்போது நடந்த விசாரணையில், மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருமால் அழகு ஆஜராகி, 'பொட்டு' சுரேஷ் மீதான குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கு பொட்டு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்தும், ''நான் ஒரு ஆன்மிகவாதி, போலீசார் திட்டமிட்டு என் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்,'' என, நீதிபதிகளிடம் கூறினார். ஆனால், இன்ஸ்பெக்டர் திருமால் அழகு, 'பொட்டு' சுரேஷ் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், 'பொட்டு' சுரேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். இதனால், ஓராண்டு சிறை தண்டனையை,'பொட்டு' சுரேஷ் அனுபவித்தாக வேண்டும்.