உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., நிர்வாகியிடம் 5 மணி நேரம் விசாரணை

பா.ஜ., நிர்வாகியிடம் 5 மணி நேரம் விசாரணை

சென்னை:தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, 4 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., மாநில அமைப்புச் செயலர் கேசவவிநாயகத்திடம், ஐந்து மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில் திருநெல்வேலி தொகுதி வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதன்படி, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உட்பட நால்வரிடம் இருந்து, 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் நயினார் நாகேந்திரன் உதவியாளர் உட்பட, 12 பேரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்று உள்ளனர். இந்த பணம் நெல்லைக்கு அனுப்பப்பட்ட விவகாரத்தில், பா.ஜ., மாநில அமைப்புச்செயலர் கேசவவிநாயகம் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, சென்னை எழும்பூரில் உள்ள, சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு கேசவவிநாயகம் ஆஜரானார். அவரிடம், டி.எஸ்.பி., சசிதரன் மாலை 4:00 மணி வரை விசாரணை நடத்தினார். அப்போது, இந்த பணத்திற்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என, கேவசவிநாயகம் வாக்குமூலம் அளித்துள்ளார்.அவருக்கு தேவையான சட்ட உதவிகளை செய்ய, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி பால்கனகராஜ் வந்திருந்தார். விசாரணைக்கு பின், பால்கனகராஜ் கூறுகையில், “ரயிலில் பிடிபட்ட பணத்திற்கும், எங்கள் கட்சியினருக்கும் தொடர்பு இல்லை என்பதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம்,” என்றார்.

சம்மனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

இந்த வழக்கில், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான, 'ப்ளூ டைமண்ட்' ஹோட்டல் ஊழியர்கள் சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் கைதாகி, சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார், 'சம்மன்' அனுப்பினர்.இந்த சம்மனை எதிர்த்து, ஹோட்டல் ஊழியர்கள் சதீஷ், பெருமாள், நவீன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'தற்போதைய நிலையில் வழக்கின் விசாரணைக்கு தடை விதிப்பதும், சம்மனை ரத்து செய்வதும் விசாரணையை பாதிக்கும். எனவே, எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர்கள் சம்மனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை