| ADDED : ஜூலை 08, 2024 11:46 PM
தேவாரம் : தேவாரம் அருகே கோம்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரகாஷ் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் அடங்கிய குழுவினர், கோம்பை கரடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பெருங் கற்காலத்தைச் சேர்ந்த மனிதர்கள் தங்களுடன் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், ஈம மண்கலங்களை கண்டறிந்துள்ளனர். இவை, 3,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என, கருதப்படுகிறது. இது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் கூறியதாவது: இந்த ஊரின் வட கிழக்கில் உள்ள சாலை மலை கரடு என அழைக்கப்படும் சிறுமலை பகுதியில், விவசாய நிலத்தை சீர் செய்யும் போது பெரும் கற்காலத்தை சேர்ந்த புதைவிடமான கல்வட்டம் இருந்தது. இதில் முதுமக்கள் தாழியின் உடைந்த பகுதிகள், தாழியின் மேல் பகுதியில் வைக்க பயன்படுத்தப்படும் பெரிய பலகை கற்கள் வெளி வந்தன. முதுமக்கள் தாழியின் கழுத்துப் பகுதியில், கயிறு போன்று வடிவமைப்பு உடைய அலங்கார கோடுகள் இருந்தன. அலங்கார வடிவமைப்புகளும், நெல்மணி அளவு உள்ள கோடுகளாலும் அலங்காரங்கள் போடப்பட்டு இருந்தன. இவை தாழிகள் சுடுவதற்கு முன் ஈரமாக இருக்கும் போது போடப்பட்டவை ஆகும்.முதுமக்கள் தாழியுடன் இறந்தவர்களின் தேவைக்காக அல்லது பயன்படுத்திய பொருட்களும் வைக்கப்படும். இங்கு ஈம கலன்களான கலயம், கூஜா, தட்டு, கிண்ணம், தண்ணீர் குவளை, சிறிய மூடி போன்ற மண் கலன்கள் உடையாமல் முழு வடிவத்துடன் கிடைத்து உள்ளன.இங்கு கிடைத்த பொருட்கள் மூலம் இப்பகுதியில் பல நுாற்றாண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் நாகரிகம், பண்பாடுகளை பெற்று வாழ்ந்துள்ளது தெரிகிறது. மேலும் ஆய்வு மேற்கொண்டால், பல தொல் தடயங்கள் கிடைக்கும். இவ்வாறு கூறினர்.