உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானைகள் அடிபடுவதை தடுக்க மின்விளக்கு

யானைகள் அடிபடுவதை தடுக்க மின்விளக்கு

சென்னை : ரயில்வே பாதை இருப்பதை யானைகளுக்கு உணர்த்தும் வகையில், 4.72 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக சூரிய மின்விளக்குகள் அமைக்கும் திட்டம் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துஉள்ளது.ரயில்களில் யானைகள் அடிபட்டு இறக்கும் சம்பவங்களை தொடர்ந்து, அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்து வருகிறது. ரயில்வே தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, அவ்வப்போது அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.இவ்வழக்கு, சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, தெற்கு ரயில்வே தரப்பில், வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:கோவை மதுக்கரை - வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையில், 12 கி.மீ., துாரத்துக்கு, ரயில் தண்டவாளம் தெரியும் வகையில் பணிகள் நடக்கின்றன. இதனால், ரயில் வருவதை பார்த்ததும், தண்டவாளத்தை விட்டு யானைகள் நகர்ந்து செல்ல முடியும். ரயில் பாதையின் பக்கவாட்டு பகுதிகளில் போதிய இடவசதியும் யானைகளுக்கு கிடைக்கும்.தமிழக, கேரள வனத்துறை அதிகாரிகள் உடன் ரயில்வே அதிகாரிகளும், கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, ரயில் பாதையின் இரு புறமும் தடுப்புகளை அமைக்கும் பணி, 5.74 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டு ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதைகளின் இருபுறமும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில்வே பாதை இருப்பதை யானைகளுக்கு உணர்த்த, சூரிய மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழக, கேரள வன எல்லைக்குள் 4.72 கோடி ரூபாய் செலவில் கூடுதலாக சூரிய மின் விளக்குகள் பொருத்தும் திட்டம் குறித்து, தெற்கு ரயில்வேக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்ற பின், இது அமல்படுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ரயில் பாதையின் இருபுறமும் தடுப்பு அமைப்பது, யானைகளின் நடமாட்டத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இந்த திட்டத்தை அமல்படுத்தும் முன், இரு மாநில வனத்துறையினருடன் ரயில்வே ஆலோசிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சந்தானராமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி