உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சமூக நீதி பற்றி பா.ம.க.,வுக்கே பாடமா? ஸ்டாலினுக்கு ராமதாஸ் பதிலடி

சமூக நீதி பற்றி பா.ம.க.,வுக்கே பாடமா? ஸ்டாலினுக்கு ராமதாஸ் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு, சமூக நீதி பற்றி மற்றவர்களுக்கு பாடம் நடத்துங்கள்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:வன்னியர்கள் மீதும், சமூக நீதி குறித்தும், ஸ்டாலினுக்கு திடீர் அக்கறை பிறந்துள்ளது. 'சமூக நீதி குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதத்தை, பிரதமர் மோடியிடம் பா.ம.க., பெற்றுள்ளதா' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். தமிழகத்தில் கூட்டணி அமைத்த போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என, கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க., உத்தரவாதம் அளித்ததா; காங்கிரஸ், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த போது, அவர்களிடமிருந்து தி.மு.க., உத்தரவாதம் பெற்றதா? மத்தியில் ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்படும் போது, மாநில கட்சிகள் கோரிக்கைகளை முன்வைக்கும். பா.ம.க.,வின் சமூக நீதி கோரிக்கைகளை, பிரதமர் மோடி ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.ஜாதிவாரி கணக்கெடுப்பு, அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி கொள்கைகளில் பா.ம.க., உறுதியுடன் போராடும். ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, 'நாங்களே அடிமைகள் தான். ஒரு அடிமை, இன்னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?' என்று, ஈழத் தமிழர்களை கருணாநிதி கைவிட்டார். அத்தகைய துரோகத்தை பா.ம.க., செய்யாது. சமூக நீதியை நிச்சயமாக வென்றெடுத்தே தீரும் என்று, தம்பி ஸ்டாலினுக்கு உத்தரவாதம் வழங்குகிறேன்.வன்னியர் உள்ளிட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு விடக்கூடாது என்ற வன்மத்தால் தான், ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க. அரசு நடத்தவில்லை. சமூக நீதியில் அக்கறை கொண்டவர் போல ஸ்டாலின் நடிக்கிறார்.சமூக நீதியில் உண்மையான அக்கறை இருந்தால், வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டு, சமூக நீதி பற்றி பேச வேண்டும்.ஒவ்வொரு முறையும் வன்னியர்களை ஏமாற்ற முடியாது. வன்னியர் சமூகத்திற்கு இழைத்த துரோகங்களுக்காக, தி.மு.க.,வுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை