டாஸ்மாக் ஊழல் பற்றி பேச அனுமதி மறுப்பு பட்ஜெட்டை புறக்கணித்து அ.தி.மு.க., - பா.ஜ., வெளிநடப்பு
சென்னை:டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, சட்டசபையிலிருந்து அ.தி.மு.க., - பா.ஜ.,வினர் வெளிநடப்பு செய்தனர்.வரும் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டசபையில் நேற்று காலை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை வாசிக்க துவங்கியதும், எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் எழுந்து பேச முயன்றார். அதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுக்கவே, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.பின், பழனிசாமி அளித்த பேட்டி:தமிழக சட்டசபை விதி 68ன்படி, சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், கடந்த ஜனவரி 16ல் கடிதம் கொடுத்திருந்தார். சட்டசபை விதி 63-ன்படி, முன்னறிவிப்பு கொடுத்து, 14 நாட்கள் முடிந்து விட்டது. எனவே, சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை, இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என, உதயகுமார் கோரிக்கை விடுத்தார்; அதை ஏற்க, சபாநாயகர் மறுத்து விட்டார்.அ.தி.மு.க., ஆட்சியில், சபாநாயகர் தனபாலை பதவி நீக்கம் செய்யக்கோரும் தீர்மானம் கொண்டு வர, அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். 14 நாட்கள் முடிந்ததும், அந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.கடந்த ஒரு வாரமாக, டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான தயாரிப்பு தொழிற்சாலைகளில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இது தொடர்பாக, அமலாக்கத்துறை வெளியிட்ட செய்தியில், '1000 கோடி ரூபாய்க்கும் மேலாக முறைகேடு நடந்துள்ளது' என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை முழுமையாக முடியும்போது, 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஆனாலும், இதுபற்றி தமிழக அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று, தி.மு.க., அரசு பதவி விலக வேண்டும். இப்பிரச்னைகள் பேச அனுமதிக்காததால், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஊழலை மறைக்க குறியீடு மாற்றம்!
அ.தி.மு.க.,வை தொடர்ந்து, டாஸ்மாக் ஊழல், ரூபாய் சின்னத்தை மாற்றியதை கண்டித்து, சட்டசபை பா.ஜ., குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.பின், நயினார் நாகேந்தின் அளித்த பேட்டி:டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான தயாரிப்பு ஆலைகளில், அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், டில்லியில் நடந்த மதுபான ஊழலை விட, அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் வந்துள்ளன. பாட்டிலுக்கு, 10 முதல் 30 ரூபாய் வரை, கூடுதல் விலைக்கு மது விற்பனை நடந்துள்ளது. 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் தேசிய சின்னத்தை, தமிழக இளைஞர்தான் உருவாக்கினார். 2010ல் தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், அச்சின்னம் அங்கீகரிக்கப்பட்டது. அந்த சின்னத்தில் மாற்றுக் கருத்து இருந்தால், அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். சர்வதேச அளவில், இந்திய ரூபாய்க்கான சின்னத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. டாஸ்மாக் ஊழல் போன்ற தி.மு.க., அரசின் ஊழல்களை மறைக்க, மொழி பிரச்னை, ரூபாய் குறியீட்டு அடையாளம் மாற்றம் போன்ற பிரச்னைகளை, தி.மு.க., கையிலெடுத்துள்ளது. இது பற்றி விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.