உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஆட்சியில் டாக்டர் உயிரிழப்பு அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

அ.தி.மு.க., ஆட்சியில் டாக்டர் உயிரிழப்பு அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை:''அ.தி.மு.க., ஆட்சியில் டாக்டர்களுக்கு தந்த மன அழுத்தம் காரணமாக, டாக்டர் லட்சுமி நரசிம்மன் உயிரிழந்தார்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றச்சாட்டி உள்ளார்.இதுகுறித்து, தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிசாமிக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்துள்ள பதில்:எதிர்கட்சி தலைவர், ஒரு துறையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து பேசுவது அவசியம். கடந்த மூன்றாண்டுக்கு முன், மருத்துவ துறையில் பொறுப்பேற்கும்போது, குளறுபடிகளும், குழப்பங்களும் அதிகமாக இருந்தது. அரசாணை 354ஐ அமல்படுத்தக்கோரி, அ.தி.மு.க., ஆட்சியில் டாக்டர்கள் நடத்திய போராட்டங்களை யாரும் மறுத்துவிட முடியாது. தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தியதற்காக, 116 டாக்டர்களுக்கு தண்டனையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.இதுவரை எந்த அரசும் செய்யாத கொடும் காரியம் அது. டாக்டர்கள் துறையில் மட்டுமல்ல, உலகளவில் மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களின் உரிமைகளுக்காக போராடினால் அழைத்து பேச வேண்டும். அதன்படி, 34 முறை அரசு டாக்டர்களுடன் பேசியுள்ளேன். குறிப்பாக, அரசாணை 293, 354 ஆகியவை குறித்து, கருத்து மாறுப்பட்ட சங்கங்களுடன் ஆலோசித்தோம். அதில், அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட்டு தீர்வு கண்டுள்ளோம்.ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் தண்டனையாக இடமாற்றப்பட்ட டாக்டர்களில் லட்சுமி நரசிம்மன், சென்னையில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் ஏற்பட்ட மன அழுத்ததால், அவர் உயிரிழந்தார். இப்படி தான், அ.தி.மு.க., ஆட்சி நடந்தது.தி.மு.க., ஆட்சிக்கு வந்தப்பின், 1,021 டாக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆரம்பத்திலேயே அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு, விருப்பமான இடங்களில் பணியமர்த்தப்பட்டனர். பல்வேறு பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டது.மேலும், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் என, 36,465 பேர் தங்கள் விருப்பப்படி பொது கலந்தாய்வில் இடமாற்றம் பெற்றுள்ளனர். முதல்வராக பழனிசாமி இருந்தபோது, எத்தனை மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார்; என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற பட்டியல் தந்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ