சென்னை:வேலுார் வி.ஐ.டி., பல்கலையின், 39வது பட்டமளிப்பு விழா, கடந்த 2ம் தேதி பல்கலை வளாகத்தில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேசிய கல்வி தொழில்நுட்ப கழகமான, என்.இ.டி.எப்., தலைவர் அனில் டி.சகஸ்ரபுதே, கர்நாடக மாநில வளர்ச்சி கழகத்தின் தலைவர் பரசுராமன் ஆகியோர், மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினர்.அதாவது, 8,205 மாணவ - மாணவியருக்கு இளநிலை, முதுநிலை பட்டங்களும், 357 பேருக்கு முனைவர் பட்டமும், 65 மாணவ - மாணவியருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.அனில் டி.சகஸ்ரபுதே பேசியதாவது:தற்போது, தொழில் நிறுவனங்கள் கல்வி, தனித்திறன், நற்பண்புகள் ஆகிய மூன்றும் சமநிலையில் இருப்பதை எதிர்பார்க்கின்றன. எனவே, மாணவர்கள் கல்வியுடன் தனித்திறன், நற்பண்புகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.உயர் கல்வியில் சேரும் மாணவர்கள், பெரும்பாலும் கம்ப்யூட்டர் அறிவியல், தகவல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.சிவில், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் போன்ற துறைகளும் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை தரக்கூடியவை. எனவே, அத்துறைகளிலும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் கற்பதை எப்போதும் நிறுத்தக்கூடாது. வாழ்நாள் முழுதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பட்டப் படிப்புகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும். அப்போது தான் புதிய பட்டப்படிப்புகளை கொண்டு வர முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேசும் போது, ''இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி உறுதி மேற்கொண்டுள்ளார். ஆனால், உயர் கல்வி இல்லாமல் நாடு வளராது. இந்தியாவின் உயர் கல்வி சதவீதத்தை, 27லிருந்து 50 ஆக அதிகரிக்க வேண்டும் என, தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.இது சாத்தியமாக வேண்டும் என்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதத்தை கல்விக்கு செலவிட வேண்டும். ஆனால், இப்போது 3 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்,'' என்றார்.வி.ஐ.டி., இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மல்லிக், வி.ஐ.டி., துணைத் தலைவர் செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.