| ADDED : மே 15, 2024 08:40 PM
கோவை:கடந்த கல்வியாண்டில், தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் மீன்வளப் பல்கலையின் சேர்க்கை ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. நடப்பாண்டில், அண்ணாமலை பல்கலை வேளாண் சார்ந்த பாடப்பிரிவுகளும் இக்கவுன்சிலிங் செயல்பாடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி சமயத்தில், அண்ணாமலை பல்கலை சேர்க்கை செயல்பாடுகள் வேளாண் பல்கலையுடன் இணைக்கப்பட்டதால், தகவல்கள் இணையளத்திலும், சாப்ட்வேர் செயல்பாடுகளிலும் இணைக்கவேண்டியது அவசியம். அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்துவருகின்றன. தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகளில், 14 இளநிலை படிப்புகள் வழங்கப்படுகிறது. கவுன்சிலிங் வாயிலாக, உறுப்பு கல்லுாரிகளில், 2,555 மாணவர்களும், இணைப்பு கல்லுாரிகளில் 2,806 மாணவர்களும், அண்ணாமலை பல்கலையின் கீழ் 340 இடங்களிலும், மீன்வளப்பல்கலையின் கீழ் 345 மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இதுகுறித்து, டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், ''அண்ணாமலை பல்கலை சார்ந்த தகவல்கள் இணைப்பு பணி நடைபெற்று வருகிறது. விண்ணப்பங்கள் பதிவு பணி நடந்து வருகிறது. பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் வழங்கிய பின்னரே, விண்ணப்ப பதிவு அதிகரிக்கும்,'' என்றார்.