சென்னை:வங்கதேசத்தில் நிலவும் பிரச்னையால், அந்நாட்டை சேர்ந்த முதிய தம்பதி, சென்னையில் தவித்து வருகின்றனர்.வங்கதேசம், பர்குனா பகுதியை சேர்ந்தவர் சுசில் ரஞ்சன், 73. அவரது மனைவி புரோவா ராணி, 61, புற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது மருத்துவ சிகிச்சைக்காக, வேலுாரில் உள்ள சி.எம்.சி., மருத்துவமனைக்கு, ஜூலை 10ம் தேதி இருவரும் வந்துள்ளனர். கடந்த 1ம் தேதி சிகிச்சை முடிந்த பின், தாய்நாடு செல்ல திட்டமிட்டனர். ஆனால், வங்கதேசத்தில் மோசமான நிலைமை உள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் 3 விமானங்கள், கடந்த இரு நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன.கடந்த 5ம் தேதி வங்க தேச தலைநகர் டாக்காவுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அன்றைய தினம் விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நேற்று சென்று விடலாம் என நினைத்து, விமான நிலையம் வந்த இருவரும், ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதி கழிப்பறை அருகே தங்கி விட்டனர். அவர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள், உணவு மற்றும் குடிநீர் வழங்கி, விமான நிலையத்தில் தங்க அனுமதித்து உள்ளனர். இது குறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'வங்க தேசத்திற்கு விமானங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தம்பதியை பற்றி வங்கதேச துாதரக அதிகாரிகளிடம் தெரிவித்து, அவர்கள் நாட்டிற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.