உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய வனத்துறை அனுமதி கிடைத்தது

மத்திய வனத்துறை அனுமதி கிடைத்தது

தென்காசி:தென்காசி மாவட்டத்தில் 60 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய வனத்துறை அனுமதியளித்துள்ளது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ராமநதி, கடனாநதி அணைகள் உள்ளன. இப்பகுதியில் அமைந்துள்ள ஜம்பு நதி கால்வாய் மூலம் கடையம், கீழப்பாவூர், ஆலங்குளம் வட்டார பகுதிகளில் 4 ஆயிரத்து 50 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இருப்பினும் ஜம்பு நதி கால்வாயில் போதிய நீர் வரத்து இல்லாததால் ராமநதி அணை நிரம்பும்போது உபரி நீரை ஜம்பு நதி கால்வாயில் திருப்பி விடும் மேல்மட்ட கால்வாய் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது. 2015ல் அ.தி.மு.க., ஆட்சியின் போது முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்ட ஆய்வு பணிக்கு ரூ.40 லட்சம், நிலங்கள் கையகப்படுத்த ரூ. 5 கோடி ஒதுக்கினார். ஆனால் அதன் பிறகும் திட்டம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அந்த வனப்பகுதி களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் வருவதால் வனத்துறையும் அனுமதி மறுத்தது.தற்போது தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி மாநில வன உயிரின நல வாரியக் குழு மூலம் மத்திய வனத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய வனத்துறை தற்போது மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரியில் கால்வாய் வெட்டும் பணிகள் துவங்கின. கால்வாய் திட்டத்திற்கு நபார்டு வங்கி நிதி ரூ.41.08 கோடியுடன் தற்போது தமிழக அரசும் ரூ.21 கோடி வழங்கியுள்ளது. எனவே இப்பணிகள் தற்போது ஜரூராக துவங்கியுள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது நாராயணப்பேரி குளம், குத்தாலப்பேரி குளம் ஆகிய அணைக்கட்டுகள் வழியாக 25 குளங்கள் மூலம் 4 ஆயிரத்து 50 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டு குழு அமைப்பாளர் ராம உதயசூரியன் நேற்று இப்பகுதியை பார்வையிட்டார். அவர் கூறியதாவது: கடையம், கீழப்பாவூர், ஆலங்குளம் பகுதி வளம் பெற இத்திட்டம் கைகொடுக்கும். தற்போது 84 அடி உயரமுள்ள ராமநதி அணையில் 82 அடி நீர்மட்டத்தை எட்டும் போது உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அப்போது 78 அடிக்கு நீர் மட்டம் வரும் பட்சத்தில் உபரி தண்ணீர் ஜம்பு நதி கால்வாய் திட்டத்தில் திருப்பி விடப்படும். 10 நாட்கள் 200 கன அடி வீதம் திருப்பி விடப்படும். தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களிலும் அணை நிரம்பும் போதெல்லாம் உபரி நீர் திருப்பி விடப்படுவதன் மூலம் இந்த பகுதி விவசாயம் பயன்பெறும். எட்டு கி.மீ., தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் ஓராண்டுக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை