கோவை: உத்தர பிரதேசம் மாநிலம், நொய்டாவில், 10,000 கோடி ரூபாய்க்கு, சரக்கு மற்றும் சேவை வரி மோசடி நடந்தது தொடர்பாக, கடந்தாண்டு ஜூனில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். 1,000த்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலியாக, 'இ - வே' பில் தயாரித்து வரிச்சலுகை பெற்று மோசடி நடந்துள்ளது.இது தொடர்பாக, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரசேதம் மாநிலங்களில், 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்த சுகன்யா, 40, என்பவர், மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. இவர், கோவையில், உலோக தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். போலி நிறுவனங்களின் பெயரில், வரிச்சலுகை பெற்று, கடந்த ஓராண்டில் மட்டும், 14.2 கோடி ரூபாயை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரிந்தது.தகவல் அறிந்த போலீசார், தலைமறைவாக இருந்த சுகன்யா மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.இந்நிலையில், இவர் இருக்கும் தகவல் அறிந்த நொய்டா போலீசார், கடந்த, 22ம் தேதி, சுகன்யாவை கைது செய்து அழைத்து சென்றனர். அவரது கணவர் பிரபுவையும் தேடி வருகின்றனர்.