சென்னை:தமிழகத்தில் போதைப்பொருள் பெருக்கம், மின் கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சீமான் பேசியதாவது:புரட்சி பெண்கள் திட்டம் என்று கூறி, மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுக்கின்றனர். அதற்கு, வறட்சி பெண்கள் திட்டம் என்று பெயர் வைத்திருக்க வேண்டும். தமிழ் புதல்வன் திட்டம் என்று கூறி, மாணவர்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்க உள்ளனர். இளைஞர்களின் ஓட்டுகள் திசை மாறி விட்டதால், இந்த முடிவை எடுத்துள்ளனர். கலெக்டர்கள் எல்லாம் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலர்களாகவே செயல்படுகின்றனர். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; அது, ஒழுங்காக இல்லை. கடந்த 30 நாட்களில், ஆம்ஸ்ட்ராங் கொலையுடன், 134 கொலைகள் நடந்து உள்ளன. நடப்பாண்டில் மட்டும், 595 கொலைகள் நடந்துள்ளன. பிரதமர் மோடியின் நண்பர் அதானி, தமிழகத்திற்கு எதற்காக வந்தார் என்பதற்கு, இதுவரை அரசிடம் பதில் இல்லை. அதானி நிறுவனம் தயாரித்த மின் கணக்கிடும் கருவி தான், தற்போது பயன்படுத்தப்படுகிறது. மின் உற்பத்தி மட்டுமல்ல; மின் வினியோகமும் அவர்களிடம் செல்வதற்கு எவ்வளவு காலமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கிடையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட, 300 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.அதேநேரத்தில், போலீஸ் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியது தொடர்பாக, திருச்சி எஸ்.பி., வருண்குமார், சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சீமானின் தரக்குறைவான பேச்சை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.