உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராய பலி சம்பவம் குறித்து கருத்து பா.ஜ., நிர்வாகி விசாரணைக்கு ஆஜர்

கள்ளச்சாராய பலி சம்பவம் குறித்து கருத்து பா.ஜ., நிர்வாகி விசாரணைக்கு ஆஜர்

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி விஷசாராய பலி சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட பா.ஜ., மாநில செயலாளர் நேற்று விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்திய மெத்தனால் புதுச்சேரியில் இருந்து கொண்டு வந்ததாக தமிழக போலீசார் தெரிவித்தனர்.''மெத்தனால் எங்கு பறிமுதல் செய்யப்பட்டது என்பதை வெளிப்படையாக கூறுங்கள் எனவும், தமிழக அரசு கூறியதற்காக, புதுச்சேரியை அவமதிக்க அனுமதிக்க மாட்டோம்'' என அந்த மாநில போலீசார் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.இதை சுட்டிக்காட்டி, பா.ஜ., மாநில செயலாளர் சூர்யா, கடந்த காலங்களில் நற்பெயரை பெற்று வந்த தமிழக காவல் துறைக்கு தற்போது தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட கருத்திற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சூர்யாவிற்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர்.அதனையொட்டி சூர்யா நேற்று காலை 10:30 மணிக்கு, விழுப்புரம் வண்டிமேட்டில் உளு்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம், ஏ.டி.எஸ்.பி., கோமதி தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர். அவர் அளித்த பதில்களை போலீசார் பதிவு செய்தனர்.விசாரணை முடிந்து வெளியே வந்த சூர்யா, நிருபர்களிடம் கூறுகையில், 'என் மீதான இந்த விசாரணை தேவையற்றது. நான் பா.ஜ.,வை சேர்ந்தவன் என்பதால் அரசியல் அழுத்தம் காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளேன். எனக்கும், இந்த வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை