உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிராம நத்தத்தை சர்க்கார் நிலமாக மாற்றுவதா? அரசாணை வெளியிட்டாலும் செல்லாது: நிபுணர்கள் எச்சரிக்கை

கிராம நத்தத்தை சர்க்கார் நிலமாக மாற்றுவதா? அரசாணை வெளியிட்டாலும் செல்லாது: நிபுணர்கள் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குடியிருப்பு பயன்பாட்டுக்காக, மக்கள் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கிராம் நத்தம் நிலங்கள், ரயத்துவாரி, சர்க்கார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, சட்ட ரீதியாக செல்லாது என்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என வல்லுனர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் மேடான பகுதிகள் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டன. இவ்வாறு ஒதுக்கப்படும் நிலங்கள் கிராம நத்தம் என்று குறிப்பிடப்பட்டு வந்தது.

கணக்கெடுப்பு

இதன் அடிப்படையிலேயே, வருவாய் துறையும் பல்வேறு வகை ஆவணங்களை பராமரித்து வந்தது. குடியிருப்பு தவிர்த்து வேறு பயன்பாட்டுக்கு செல்லக்கூடாது என்பதற்காக, இந்த நிலங்களுக்கு பட்டா வழங்கப்படாமல் இருந்தது.ஆனால், காலப்போக்கில் கட்டுமான திட்ட அனுமதி, பத்திரப்பதிவு, வங்கிக்கடன் போன்ற நிகழ்வுகளில், பட்டா தேவைப்படுகிறது. இத்தேவையை கருத்தில் வைத்து, கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த, 1985ல் தமிழகம் முழுதும் உள்ள நத்தம் நிலங்கள் குறித்த விரிவான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், தனியார் வசம் உள்ள நிலங்கள் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டதுடன், அவற்றின் எல்லைகளும் வரையறுக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான், கிராம நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும், 1,000த்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை, 2023 மே 4ல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில், தனியார் பெயரில் பட்டா உள்ள கிராம நத்தம் நிலங்கள் இனி ரயத்துவாரி என்றும், பட்டா வழங்கப்படாமல் உள்ள அனைத்து நத்தம் நிலங்களும் சர்க்கார் நிலம் என்று வகைப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இத்துடன், பட்டா இல்லாத கிராம நத்தம் நிலங்கள் தொடர்பான பரிவர்த்தனைகள், பட்டா வழங்கும் பணிகளை நிறுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய் துறையின் இந்த நடவடிக்கை, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்படி செல்லாது

இதுகுறித்து, ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர் பி.பாலமுருகன் கூறியதாவது: கிராம நத்தம் நிலங்கள் குறித்த அடிப்படை தெரியாமல், அதை பெயர் மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக ரீதியாக இதற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால், நடைமுறை ரீதியாக பார்த்தால், இதில் பல்வேறு பிரச்னைகள் எழும்.தமிழகம் முழுதும், தனியார் வீடு கட்டி வசிக்கும் அனைத்து நிலங்களுக்கும், பட்டா வழங்கும் பணிகள் முழுமை அடையாத நிலையில், இந்த முடிவு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.கிராம நத்தம் நிலங்களில், 20, 30 ஆண்டுகளாக வசிப்பவர்கள் பட்டா பெற விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது, பட்டா இல்லாத நத்தம் நிலங்கள் சர்க்கார் நிலம் என்பது எந்த வகையிலும் நியாயமாகாது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் நீதிமன்றத்தை அணுகினால், இந்த குறிப்பிட்ட அரசாணை ரத்தாகிவிடும். நத்தம் நிலங்கள் விஷயத்தில் பட்டா வழங்கபடாத நிலங்கள் குறித்த தெளிவான முடிவை எடுக்காமல், இப்படி பெயர் மாற்றம் செய்வது எதிர்காலத்தில் புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும். பாரம்பரியமாக மக்கள் குடியிருக்கும் நிலங்கள் பறிபோகும் சூழல் ஏற்படும்.எனவே, சட்ட ரீதியாக இதில் காணப்படும் பிரச்னைகளை உணர்ந்து, இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.நிலம் மற்றவர்களுக்கு போய்விடும் ஆபத்துஒவ்வொரு நிலத்துக்கும் என்ன வகைபாடு என்பது, பல்வேறு காலகட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஆய்வுகள் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது. இந்த வழியில்தான், குடியிருப்பு பயன்பாட்டுக்காக மட்டும் என ஒதுக்கப்பட்ட நிலங்கள், கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்டன. முழுமையாக தனியாரின் ஏகபோகத்தில் இருந்து வரும் இந்த நிலங்களுக்கு பட்டா வழங்காததற்கு காரணங்கள் உள்ளன.நடைமுறையில் குறிப்பிட்ட சில பணிகளில் பிரச்னை ஏற்படுகிறது என்பதற்காக தான், இந்நிலங்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது. இந்த அடிப்படையை புரிந்து கொள்ளாமல் கிராம நத்தம் நிலங்களை ரயத்துவாரி மற்றும் சர்க்கார் என பெயர் மாற்றம் செய்வது முற்றிலும் தவறு. ஏற்கனவே, அனாதீன நிலங்கள் தனியாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றன.வருவாய் துறையின் இந்நடவடிக்கையால், கிராம நத்தம் நிலங்கள் உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருந்து, அரசின் வழியாக வேறு நபர்களுக்கு செல்லும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த முடிவை அரசு கைவிட வேண்டும். -- பி.கல்யாணசுந்தரம்தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்

பொது பயன்பாட்டில் பாதிப்பு

தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் கிராம நத்தம் நிலங்களில் வசிப்போர், அதில் குறிப்பிட்ட பகுதியை கோவில், சாலைகள் போன்ற பொது பயன்பாட்டுக்கு அளித்துள்ளனர். பெரும்பாலான கிராமங்களில், உள்ளூர் மக்கள் அளித்த நத்தம் நிலங்களில் தான் கோவில்கள், தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பொது பயன்பாடு என்ற அடிப்படையில் தான் பராமரிக்கப்படுகின்றன. தற்போது, இந்நிலங்களை சர்க்கார் நிலம் என்று, அரசு உரிமை கொண்டாடுவது புதிய சட்ட சிக்கல்களை ஏற்படுத்தும்.கிராம வாரியாக நத்தம் நிலங்களின் பயன்பாடு மாறுகிறது. பல்வேறு பகுதிகளில் அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு, உள்ளூர் மக்கள் வழங்கிய நத்தம் நிலங்கள் தொடர்ந்து பொது பயன்பாட்டில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.எனவே, இது தொடர்பாக அரசாணையை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே பல்வேறு தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு- நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Muthazhaghan RPO
ஆக 15, 2024 02:36

பொதுமக்களின் நலன் கருதியும் எதிர்கால அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் அரசு வங்கி கடன் தனியார் மற்றும் பெருநிறுவன வங்கி கடன் மாநில அரசு வழங்கும் வீடு கட்டும் பணி மத்திய அரசு வழங்கும் அனைவருக்கும் வீடுவழங்கும் திட்டம் முதலிய திட்டங்களுக்கு அரசு நத்தம் நிலத்தில் வீடு கட்டி குடியிருப்பவர்கள் அனைவருக்கும் உடனடியாக ஆய்வு செய்து பட்டா வழங்க வேண்டும் எதிர் காலத்தில் பெரிய நடைமுறை சட்ட சிக்கலை ஏற்படுத்தும். எனவே இதற்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.. அரசு பொற்கால ஆட்சியில் போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி நான் என் பதிவை பதிவு செய்து கொள்கிறேன்.


Balamurugan
ஜூன் 27, 2024 23:10

loan mod t cancel Seyya MudiyaviLLai


Balamurugan
ஜூன் 27, 2024 23:04

விவசாய இடத்தில் இருந்தால் அதை அரசு கையக படுத்தலாம். மனையில் இருப்பவரை யேன் இப்படி செயிகிறது


Daniel Abraham Samuel
ஜூன் 27, 2024 14:55

கிரயம் செய்த நிலம் தற்போது கிராம கணக்கில் இரயத்துவாரி அரசு நிலம் என்று உள்ளது சரிசெய்ய யாரை அணுகவேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ