சென்னை: பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காலி நிலங்களில், கால்நடை தீவனங்கள் சாகுபடியை துவங்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் கிராமங்கள், மாவட்டங்கள் மற்றும் மாநில அளவில், மூன்று வகையான பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. கிராமங்களில், 3.21 லட்சம் உறுப்பினர்களுடன், 9,189 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக நாள்தோறும், 36 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது, சில மாதங்களுக்கு முன், 26 லட்சம் லிட்டராக குறைந்ததால், பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பால் உற்பத்தி குறைவே, இதற்கு காரணமாக கூறப்பட்டது.இந்நிலையில், பால் உற்பத்தியை பெருக்குவது குறித்து ஆவின் நிர்வாகம் ஆய்வு நடத்தியது. அதில், கறவை மாடுகளுக்கு அடர் தீவனம், உலர் தீவனம், பசுந்தீவனம் ஆகியவற்றை தேவையான அளவில் வழங்கினால், பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்; மாடுகளின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனையும் அதிகரிக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இதற்காக, பால் கூட்டுறவு சங்கங்களுக்கு சொந்தமான காலி நிலங்களில் தீவனங்கள் சாகுபடியை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது.பால்வளத் துறைக்கு சொந்தமாக பல ஏக்கர் காலி நிலங்கள் உள்ளன. இவற்றை மெட்ரோ ரயில், அரசு அலுவலகங்கள், சிப்காட் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டிற்கு, அரசு கையகப்படுத்தி வருகிறது. இதனால், ஆவினுக்கு சொந்தமான சொத்துக்கள் கைமாறி வருகின்றன. அதேநேரம், பால் கூட்டுறவு சங்கங்கள் வருவாய் இன்றி தள்ளாடுகின்றன. இந்தச் சங்கங்களின் வருவாயை அதிகரிக்க, பால் பொருட்களின் மொத்த விற்பனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து, சங்கங்களுக்கு சொந்தமான காலி நிலங்களில், கால்நடை தீவனங்கள் தயாரிக்க தேவையான மக்காசோளம், உளுந்து, வேலி மசால், அசோலா உள்ளிட்ட பலவகை தீவனங்கள் சாகுபடி துவங்கப்பட உள்ளது.- ஆவின் அதிகாரி