சென்னை : “ஜாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும், வழக்குகளை விரைந்து நடத்த, அரசு தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர்,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.திருநெல்வேலியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக, நேற்று சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அக்கட்சியின் சட்டசபை தலைவர் நாகை மாலி, பா.ஜ., வானதி உட்பட பலர் பேசினர்.அதற்கு முதல்வர் அளித்த பதில்:திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், இம்மாதம், 13ம் தேதி இரு வேறு சமூகத்தை சேர்ந்த மணமக்களுக்கு, ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டு, புகைப்படம் முகநுால் பக்கத்தில் பதிவிடப்பட்டதாக தெரிகிறது.மறுநாள் மணப்பெண் குடும்பத்தினர், கட்சி அலுவலகம் சென்று தகராறில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக, கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில், ஏழு பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தில் ஜாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக, விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.பெண் கல்வி, சம உரிமை, ஜாதி மறுப்பு திருமணம் ஆகியவற்றை, தி.மு.க., தன் ஆரம்ப காலம் தொட்டே ஆதரித்து வரக்கூடிய இயக்கம். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இதுபோன்ற பிற்போக்குத்தனமான சமூக குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள், மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளில், குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கி தரப்படுகிறது.இதற்கென ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வருவதற்கு பதிலாக, இதுபோன்ற குற்றங்களுக்கு நடைமுறையில் உள்ள சட்டங்கள் அடிப்படையில், வேகமாக நடவடிக்கை எடுக்கலாம் என, அரசு கருதுகிறது.இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவது ஒருபுறம் இருந்தாலும், பொருளாதார வளர்ச்சி வழியாக, பெண் கல்வி உயரும் போதும், கல்வி, பொருளாதாரத்தில், வேலை வாய்ப்பில் ஒரு வளர்ச்சி பெற்ற சமுதாயமாக உயரும் போதும், இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும். அதை நோக்கியே, இந்த அரசு பயணிக்கிறது.சமூக நீதியிலான பிரச்னைகளை எதிர்கொள்ள, ஜாதி மறுப்பு திருமணம் தொடர்பான, அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்த, அரசு தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர்.இதுபோன்ற குற்றங்களில் எல்லாம், குற்றவியல் நடைமுறை சட்டப்படி, போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுகிறார். ஆனால், இவ்வழக்குகளின் விசாரணையை தீவிரப்படுத்த, விசாரணை அலுவலராக டி.எஸ்.பி.,யை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இக்குற்றங்களை குறைப்பதற்காக, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, தேவையான முடிவுகள் எடுக்கப்படும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.