உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவலர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தாமதம்

காவலர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை தாமதம்

தேனி : 'போலீசாரின் குழந்தைகளுக்கு, காவலர் நல நிதியில் இருந்து வழங்கப்படும் கல்வி உதவித்தொகை கிடைப்பதில் ஓராண்டு வரை தாமதமாகிறது. 'விண்ணப்பங்களை விரைவில் பரிசீலனை செய்து நிதி வழங்க டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.போலீசாரின் மகன், மகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையையும், சிறப்பு கல்வி பரிசு தொகையையும் உயர்த்தி, 2023 -- 2024ல் காவலர் மானிய கோரிக்கையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஏற்கனவே, 100 பேருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை, 200 பேருக்கு என, அதிகரிக்கப்பட்டது. தலா, 30,000 ரூபாய் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது.மேலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வில் முதல், 10 இடங்களை பெறும் போலீசாரின் மகன், மகள்கள் என, 460 பேருக்கு சிறப்பு கல்வி பரிசுத் தொகையாக, 28.29 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட நிதியை அதிகரித்து, 56 லட்சத்து 58,000 ரூபாயாக இரட்டிப்பாக்கி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த ஸ்டேஷன் வாயிலாக, 15 நாட்களில், விண்ணப்பதாரர் கல்வி உதவித்தொகை பெற தகுதி உடையவரா என, ஆய்வு நடக்கிறது.பின், விண்ணப்பம் எஸ்.பி.,க்களின் ஒப்புதலுடன், டி.ஜி.பி.,யால் நியமிக்கப்பட்ட குழுவினருக்கு அனுப்பப்படுகிறது. அந்த குழு ஆய்வு செய்த பின், தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையில், சில காரணங்களால் நிதி வழங்க ஓராண்டு வரை தாமதமாகிறது. இந்த நிதியை நம்பி கடன் வாங்கி கட்டணம் செலுத்திய பயனாளிகள் உரிய நேரத்தில் நிதி கிடைக்காமல் தவிக்கின்றனர். விண்ணப்ப பரிசீலனையை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க டி.ஜி.பி., உத்தரவிட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
மார் 12, 2025 07:11

லஞ்சத்தின் பேரில் குற்றங்கள் புரிவோர்களுக்கெல்லாம் அரசாங்கங்கள் நிதியை வாரி வழங்குகின்றன அவரகள் நேர்மையாக வேலை செய்து மாத சம்பளத்தை மட்டுமே நம்பி இருப்பது போல.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை