| ADDED : மார் 28, 2024 11:57 PM
தேனி:தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், இறுதியில் தேனி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன் வேட்பு மனு ஏற்கப்பட்டது.தேனி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த 43 மனுக்கள் பரிசீலனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் ஷஜீவனா தலைமையில் நடந்தது. பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளரான அக்கட்சி பொதுச்செயலாளர் தினகரன் வேட்பு மனு பரிசீலனையின் போது அ.தி.மு.க., தி.மு.க.,வினர், 'மனுவில் போதிய விபரம் இல்லை. மனு இணையத்தில் தாமதமாக பதிவேற்றபட்டுள்ளது. அவருக்கு சிங்கப்பூர் குடியுரிமை உள்ளது. புதுச்சேரி நிலங்கள் பற்றிய குறிப்பு இல்லை. அந்நிய செலாவணி வழக்கு தகவல் இல்லை. மனுவை ஆய்வு செய்ய அவகாசம் தேவை' என்றனர்.தினகரன் வழக்கறிஞர் ஜனசேனன், அ.ம.மு.க., வழக்கறிஞர் ராஜா செந்துார் பாண்டியன் பேசுகையில், 'முதல்வர் ஸ்டாலின் வேட்பு மனுவும் இதே போல் தான் தேர்தல் ஆணைய இணையத்தில் உள்ளது. அந்நிய செலாவணி வழக்கு தொடர்பான தகவல் முழுவதும் மனுவில் உள்ளது என்றனர்.தேர்தல் அலுவலர் கூறுகையில், வேட்புமனு விவரங்கள் பாரபட்சமின்றி இணையத்தில் பதிவேற்றபடுகிறது. தினகரன் மனு ஒரு மணிநேரம் நிறுத்தி வைத்து அனைத்து மனுக்கள் பரிசீலனை முடிந்த பின் இம்மனுவை ஆய்வு செய்யலாம் என்றார். ஒரு மணிநேரத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., வினர் ஆட்சேபனைகளை எழுத்துப்பூர்வமாக வழங்கி முறையிட்டனர். மதியம் 3:00 மணிக்கு பரிசீலனை துவங்கிய போது அ.ம.மு.க.,வினர், ஆட்சேபனை மனு அளித்தவர்கள் மட்டும் கூட்டரங்கில் அனுமதிக்கப்பட்டனர். பரிசீலனையில் தினகரன் மனு ஏற்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.